நொய்டா, உத்தர பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையை பிடிக்கும் பணியில், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், சிறுத்தை ஒன்று நடமாடி வருவதாக, அங்கு வசிக்கும் மக்கள் புகார் எழுப்பினர்.
அச்சமடைந்த இவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், ஏழு குழுக்களாக பிரிந்து, சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இது குறித்து வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்துள்ளோம்.
‘அது தப்பிச் செல்லாமல் இருக்க, குடியிருப்பு பகுதிகளின் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டுள்ளன. சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், குடியிருப்புவாசிகளை வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்திஉள்ளோம்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement