கோவில்பதாகை பகுதியில் மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

ஆவடி: கோவில்பதாகை பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் மந்தகதியில் நடைபெறுகின்றன. இதனால் முற்றுப்பெறாத கால்வாய் பகுதிகளில் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகின்றன. இக்கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பதாகை பிரதான சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது. இதை தவிர்க்கும் பொருட்டு, எச்.வி.எப் எஸ்டேட் நுழைவு வாயில் முதல் கன்னடபாளையம் வரை தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில், ₹11 கோடி மதிப்பில் 3937 அடிக்கு சாலையின் இருபுறமும் 5.5 அடி ஆழம், 5 அடி அகலத்தில் கடந்த ஆண்டு மத்தியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கியது.

இதைத் தொடர்ந்து, ஆவடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் இதன் வழியே பாய்ந்து, கன்னடபாளையத்தில் உள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக, கிருஷ்ணா கால்வாய் வழியே புழல் ஏரிக்கு பாயும் வகையில் மழைநீர் கால்வாய் பணிகள் திட்டமிடப்பட்டது. இதனால் கோவில்பதாகை பகுதிகள் மழைநீர் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கோவில்பதாகை பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் முற்றுப்பெறாமல், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மந்தகதியில் நடைபெற்று வருகிறது. கோவில்பதாகை பகுதியில் ஆங்காங்கே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் முற்றுப்பெறாமல், திறந்த நிலையில் பள்ளமாக உள்ளது.

இதனால் அங்கு கழிவுநீர் மற்றும் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அப்பகுதி சாலைகளும் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழைநீர் கால்வாய்க்கு நடுவே உள்ள மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. இங்கு பல மாதங்களாக மழைநீர் கால்வாய் மிகவும் மந்தகதியிலேயே நடைபெற்று வருகிறது. இதனால் கோவில்பதாகை பிரதான சாலையில் ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இப்பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க அமைக்க வேண்டிய மழைநீர் கால்வாய், தற்போது பணி மந்தகதியால் பாதாள சாக்கடை போல் உருமாறி காட்சியளிக்கிறது. எனவே, கோவில்பதாகை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும், முற்றுபெறாத இடங்களில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.