திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெடி வழிபாடு நடத்துவது வழக்கமாகும். இங்கு நடைப்பந்தல் பகுதி அருகேயும், மாளிகைப்புரத்திலும் வெடி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மாளிகைப்புரத்தில் வெடி மருந்து நிரப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் ஜெயக்குமார், அமல், ரெஜீஷ் ஆகிய 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து 3 பேரும் மீட்கப்பட்டு முதலில் சன்னிதானம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயக்குமார் என்பவரின் உடல்நிலை மோசமாக உள்ளது. இதற்கிடையே விபத்தை தொடர்ந்து மாளிகைப்புரத்தில் வெடி வழிபாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று வெடிபொருள் துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் பரிசோதனை நடத்துகின்றனர். பரிசோதனைக்குப் பிறகு மாளிகைப்புரத்தில் வெடிவழிபாட்டை மீண்டும் தொடங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.