சரியான நேரத்தில் அரசு பேருந்து இயக்காததால் பள்ளி மாணவர்கள், பயணிகள் மறியல்

பொன்னேரி: அரசு பேருந்தை சரியான நேரத்தில் இயக்காததால் பள்ளி மாணவர்கள், பயணிகள் பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்திலிருந்து   அண்ணாமலைச்சேரி கிராமத்திற்கு  தடம் எண் 90சி மற்றும் 90ஏ என்ற இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில்,  நேற்றுமுன்தினம் மாலை பள்ளி முடிந்த பிறகு பேருந்து நிலையம் வந்து நின்றும், சுமார் 2மணி நேரம் தாமதமாகியும் பேருந்து வரவில்லை. எனவே, ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் சக பயணிகளுடன் இணைந்து பொன்னேரி பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், தங்களது கிராமத்திற்கான அரசு பேருந்தை அதிகாரிகள் சரிவர இயக்குவதில்லை. பல நாட்கள் மாலை நேரத்தில் இயக்க வேண்டிய தங்களது கிராம பேருந்தை எந்த காரணமுமின்றி ரத்து செய்வதால், எங்களோடு சேர்ந்து மற்ற பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக தெரிவித்தனர். காலை நேரங்களிலும் பேருந்து குறித்த நேரத்தில் இயக்கப்படாமல், பள்ளிக்கு தாமதமாகிறது. எனவே, இதனால் பள்ளியில் ஆசிரியர்கள் தரக்குறைவாகப் பேசுவதாகவும் வேதனையாக தெரிவித்தனர். பேருந்து இல்லாதது குறித்து பணிமனை அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிப்பதாக மாணவர்கள் வேதனையுடன் புகார் தெரிவித்தனர். இனிவரும் நாட்களில் தங்களது கிராமத்துக்கு வரும் அரசு பேருந்தை முறையாக குறித்த நேரத்தில் இயக்க வேண்டும் என கூறினர்.

மாணவர்களின் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவலறிந்ததும், பொன்னேரி போலீசார்   சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து, வழக்கமாக இயக்கப்படும் பேருந்து பழுதடைந்ததாகவும், மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு மாணவர்கள், கிராம மக்கள் மாற்று பேருந்தில் புறப்பட்டு சென்றனர். மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.