உலகின் மிக உயரமான போர்க்களமான, பனிபடர்ந்த சியாச்சின் மலைப்பகுதி இந்திய ராணுவப்படைப் பிரிவின் முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையை, கேப்டன் ஷிவா சவுகான் பெற்றுள்ளார்.
இமயமலையில், காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள சியாச்சின் பனிப்பாறை, சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயர்ந்த ராணுவமயமாக்கப்பட்ட மண்டலம். இங்கு, சுமார் 15,600 அடி உயரத்தில் அமைந்துள்ள குமார் போஸ்ட்டில், தன்னுடைய மூன்று மாத கடுமையான பயிற்சிக்குப் பிறகு, கடந்த திங்கள்கிழமை அன்று ராணுவ அதிகாரியாக கேப்டன் ஷிவா சவுகான் பணியமர்த்தப்பட்டதாக, இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேப்டன் சவுகான், பல்வேறு போர் பொறியியல் பணிகளை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள சப்பர்ஸ் குழுவை வழிநடத்துவார் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக அவர், சியாச்சின் போர்ப் பள்ளியில் இந்திய ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில், ராணுவத்தினருடன் இணைந்து தீவிர பயிற்சி பெற்றதாக தெரிவித்துள்ள இந்திய ராணுவ வட்டாரங்கள், இதில் சகிப்புத்தன்மை பயிற்சி, பனிச்சுவர் ஏறுதல், பனிச்சரிவு மற்றும் சிதைவு மீட்பு, மற்றும் உயிர்வாழும் பயிற்சிகள் அடங்கும் என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, பெண் அதிகாரிகள் சிலர் 9,000 அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பேஸ் முகாமில், அவர்களின் வழக்கமான பணியிடங்களின் ஒரு பகுதியாக நியமிக்கப்பட்டனர்.
இந்நடவடிக்கையை, `ஊக்கமளிக்கும் அடையாளம்’ என்று கூறியுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேப்டன் சவுகானுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் பெண்கள் ஆயுதப் படைகளில் சேருவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சியாச்சினில் ராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கேப்டின் ஷிவா சவுகான், தனது 11 வயதில் தந்தையை இழந்தவர்; அவரின் தாய் வீட்டுவேலை செய்து ஷிவா சவுகானை படிக்க வைத்துள்ளார். குழந்தைப் பருவத்தில் இருந்தே, அவர் ஆயுதப் படையில் சேர ஆர்வமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.