தண்டையார்பேட்டை கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார். 32 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். இவரது மனைவியின் பெயர் பபிதா. 30 வயதான பபிதா பெண்கள் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 9 வயதில் பெண் குழந்தையும் 7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். புத்தாண்டின் போது பபிதா தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்ட நிலையில் நந்த குமார் தனது வீட்டில் தன் நண்பர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காலை வந்த பபிதா அலங்கோலமாக இருந்த வீட்டினைப் பார்த்து தனது கணவரிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
இந்தப் பேச்சு வாக்குவாதமாக மாற ஆத்திரமடைந்த நந்தகுமார் பபிதாவை சேலையைக் கொண்டு கழுத்தை நெறித்துக் கொலை செய்து தள்ளிவிட்டுள்ளார். போதையில் இருந்ததால் மீண்டும் உறங்கச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து, தாய் எழவில்லை என்று குழந்தைகள் நந்தகுமாரிடம் கூற அவரும் எழுப்பியுள்ளார். பபிதா எழாத நிலையில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பபிதா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் பபிதாவின் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவலர்கள் விசாரணை செய்ததில் நந்தகுமார் ஆத்திரத்தில் கழுத்தை நெறித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இது குறித்து விசாரணை செய்கின்றனர்.