திருமலை: உள்ளூர் பக்தர்களின் வருகை குறைந்ததால் திருப்பதி கோயில் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட் கவுன்டர் 4 ஆக குறைத்து தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 2ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வருகிற 11ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, ரூ.300 நுழைவு சிறப்பு தரிசனத்திற்கான 2 லட்சம் டிக்கெட்டுகளை ஆன்லைனில் தேவஸ்தானம் ஏற்கனவே விநியோகித்தது. இதுதவிர நாளொன்றுக்கு 45 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் என 10 நாட்களுக்கு 4.50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
இதற்காக திருப்பதியில் 9 இடங்களில் கவுன்டர் திறக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதுதவிர திருமலையில் கவுஸ்துபம் பக்தர்கள் ஓய்வறை பகுதியிலும் ஒரு கவுன்டர் திறக்கப்பட்டு வழங்கப்பட்டது. இன்று வரை சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது. நாளை முதல் 11ம் தேதி வரையிலான டிக்கெட்டுகள் நேற்று முதல் வழங்கப்படுகிறது. இதனிடையே, கடந்த 2 நாட்களாக உள்ளூர் பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்தது. வெளியூர் பக்தர்கள் மட்டுமே டிக்கெட்டுகளை பெறுகின்றனர்.
இதனால், மொத்தமுள்ள 10 கவுன்டர்களை 4 ஆக குறைத்து தேவஸ்தானம் உத்தரவிட்டது. அதன்படி, நேற்று முதல் அலிபிரி பூதேவி காம்பளக்ஸ், பஸ் நிலையம் எதிரே உள்ள சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் எதிரே உள்ள விஷ்ணு நிவாசம் ஓய்வறை மற்றும் ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய 4 இடங்களில் மட்டும் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகிறது. எனவே, வெளியூர் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி டிக்கெட் பெற்று சொர்க்கவாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம்.
* ரூ.3.13 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 71,924 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 15,771 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று முன்திம் இரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.3.13 கோடி காணிக்கை கிடைத்தது. கடந்த 2ம் தேதி திருப்பதியில் வரலாற்றில் முதல் முறையாக ஒரேநாளில் ரூ.7.68 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நிலையில், நேற்று முன்தினம் காணிக்கை திடீரென குறைந்துள்ளது.