தூக்கத்தில் பேசுவது, நடப்பது; ஏன், தீர்வு என்ன? – மருத்துவ விளக்கம்

நம்மில் சிலருக்கு தூக்கத்தில் பேசுகிற பழக்கம் இருக்கலாம். அதே நேரம், தான் தூக்கத்தில் பேசியது பெரும்பாலும் சம்பந்தப்பட்ட நபருக்கே நினைவில் இருப்பதில்லை. தூக்கத்தில் பேசுவதை பலரும் பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், சிலருக்கு அது குறித்த கேள்விகள், சந்தேகங்கள் இருக்கலாம்.

தூக்கத்தில் பேசுகின்ற பழக்கம் கவனம் கொடுக்க வேண்டிய பிரச்னையா என, Interventional Pulmonary and Sleep Medicine நிபுணர் பென்ஹர் ஜோயல் ஷாத்ராக்கிடம் கேட்டோம்.

பென்ஹர் ஜோயல் ஷாத்ராக்

“மனிதர்களாகிய நாம், வாழ்வின் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்தில்தான் செலவிடுகிறோம். பொதுவாக, நாம் 6 மணிநேரம் தூங்குகிறோம் என்றால் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் லேசான தூக்கம், ஆழ்ந்த தூக்கம் என கட்டங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இவற்றை மருத்துவத்தில் REM (Rapid Eye Moment Sleep) மற்றும் NREM (Non Rapid Eye Moment Sleep ) என்பார்கள். இந்த NREM தூக்கத்தில் இன்னும் பல கட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டத்துக்குக்கென ஒவ்வொரு செயல்பாடு நடக்கும். ஆனால் தூக்கத்தில் அசாதாரணமாக ஏதேனும் ஒன்றை ஒருவர் செய்தால், அப்போது அந்த நிலையை Parasomnia என்கிறோம்.

பெரும்பாலும் 3 முதல் 7 வயதுள்ள குழந்தைகளுக்குத்தான், தூக்கத்தில் பேசும் பழக்கம் அதிகமாக உள்ளது. மேலும், இந்தப் பழக்கம் ஆண்களிடம் அதிகம் என்கின்றன ஆராய்ச்சிகள். தாங்கள் தூக்கத்தில் பேசும் விஷயத்தை யாரும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டார்கள். அவர்கள் தூக்கத்தில் முணுமுணுப்பது, அப்போது அவர்கள் கண்ட கனவோடு தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது, அவர்கள் வாழ்வில் அப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயம் தொடர்பானதாக இருக்கலாம்.

எந்த வயதினரும், மாதத்தில் ஒருமுறை, இருமுறை என தூக்கத்தில் முணுமுணுப்பது சாதாரணமானதுதான். ஒருவேளை இது தொடர்ந்து நடக்கும் பட்சத்தில், மனஅழுத்தம், ஏதேனும் வருத்தம், மதுப்பழக்கம், புகையிலைப் பழக்கம், வேறு ஏதேனும் உளவியல் ரீதியான பிரச்னைகள் இருக்கிறதா என்று கவனம் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் தூக்கம்!

எனவே, 7 வயத்துக்கு மேல் தொடர்ந்து தூக்கத்தில் பேசுகின்ற பழக்கம் இருக்கிறவர்களை, Interventional Pulmonary and Sleep Medicine நிபுணரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது. அப்போதுதான் எந்த நேரத்தில் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

தூக்கத்தில் பேசுவது நரம்பு சம்பந்தப்பட்ட நோய் அல்ல. அதேபோல, தூக்கத்தில் பேசுவதும், தூக்கத்தில் நடப்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது அல்ல. ஆனால் அவை இரண்டுமே மருத்துவத்துறையில் Parasomnia என்றுதான் அழைக்கப்படுகிறது. அதாவது, தூக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் அசாதாரண செயல்பாடுகள் இவை. தூக்கத்தில் நடக்கும் பழக்கத்தை பொறுத்தவரை தன்னை அறியாமல் மற்றவர்களுக்குக் காயம் ஏற்படுத்த நேரிடலாம்.

தூக்கத்தில் பேசுவது, நடப்பது போன்ற பழக்கங்களை கட்டுக்குள் கொண்டுவர ஒரு சில வழிகள் உள்ளன. முதலாவதாக, இது சாதாரணமான ஒன்றுதான் என்பதை நம்ப வேண்டும். இரண்டாவதாக, தூங்கச் செல்லும் நேரம் மற்றும் தூக்கத்தில் இருந்து எழும் நேரத்தை தினமும் சீராகக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆழ்ந்த தூக்கம்

அடுத்ததாக, உறங்கும் அறையில் வேறெந்த வேலைகளும் செய்யக்கூடாது. அதாவது டிவி பார்ப்பது, அலுவல் சார்ந்த பணிகளை மேற்கொள்வது கூடாது. டிவி, லேப்டாப், மொபைல்போன் போன்றவற்றை, தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே அணைத்து வைத்து விடுவது சிறந்தது. அதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் அதிக கலோரி நிறைந்த உணவுகள், காஃபின் (caffine) உணவுகள், மதுபானம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் நல்ல ஆரோக்கியமான தூக்கம் பெற வழிவகை செய்யும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.