தமிழகத்தில் ‘டிராவல் இந்தியா’ என்ற அமைப்பு மூலம் ஆண்டுதோறும் வெளிநாட்டுச் சேர்ந்தவர்கள் ஆட்டோ ரிக்ஷா மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்து தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் தமிழர்களின் பெருமைகள் மற்றும் கோவில்களை சுற்றி பார்ப்பதுடன் ஏழை பள்ளி மாணவர்களுக்கு கட்டிடம் மற்றும் கல்வி உதவி தொகைகளை வழங்குவர்
அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 28 ஆம் தேதி சென்னையில் தங்களது பயணத்தை துவங்கிய இவர்கள் பாண்டிச்சேரி, தஞ்சாவூர், ராஜபாளையம், ஆகிய பகுதிகளுக்கு சென்றுவிட்டு இன்று தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பிரம்ம ஜோதி என்ற பண்ணைக்கு வந்தனர்.
இந்த ஆட்டோ ரிக்க்ஷா குழுவில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, எஸ்டோனியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 33 ஆண்களும், நான்கு பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி சாயர்புரம் பண்னைக்கு வந்த இவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சேலை அணிந்து பொங்கல் வைப்பது குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் வேஷ்டி, சேலைகளை அணிந்து தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பனை ஓலை வைத்து பச்சரிசி, வெல்லம், நெய்யிட்டு சர்க்கரை பொங்கலை வைத்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை தாங்கள் இங்கு கொண்டாடியது தங்களுக்கு மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.