சென்னை: “உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு நைனிடால் பகுதியில் வசிக்கும் இசுலாமியப் பெருமக்களின் வீடுகளை இடித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் அருகேயுள்ள ஹல்த்வானி ரயில்நிலையம் அருகே கடந்த ஒரு நூற்றாண்டுகளாக வசித்து வரும் ஏறத்தாழ 4000 வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்க முயலும் அம்மாநில பாஜக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இஸ்லாமியர்கள் என்பதாலேயே உள்நோக்கத்துடன் 50 ஆயிரம் மக்களை வீதியில் நிறுத்த முனைவது பாரதிய ஜனதா கட்சியின் மதவெறி மனப்பான்மையே வெளிப்படுத்துகிறது.
இசுலாமியப் பெருமக்கள் கணிசமாக வசிக்கும் நைனிடால் பகுதியில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்த காரணத்தினாலேயே பழிவாங்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்பு என்றுகூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முனைகிறது. ஆக்கிரமிப்பு என்றால் கடந்த ஒரு நூற்றாண்டுகளாக அவர்களை அப்பகுதியில் வசிக்க அரசு எவ்வாறு அனுமதித்தது? அவர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, எரிகாற்று இணைப்பு எவ்வாறு வழங்கியது? அவற்றை வழங்கிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வாக்கு கேட்டு அப்பகுதிக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லும்போது தெரியவில்லையா அது ஆக்கிரமிப்பு நிலமென்று? அல்லது ஆக்கிரமிப்பு என்று தெரிந்தே அனுமதித்தீர்களா?
அம்மக்கள் அங்குக் குடியேறும்போதே வெளியேறச் சொல்லியிருந்தால் அவர்கள் வேறு இடத்திற்குக் குடி பெயர்ந்திருப்பார்கள். அதை விடுத்து மூன்று தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்து, பல்லாயிரம் மக்கள் அரும்பாடுபட்டு உழைத்துச் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் தங்களது வாழ்நாள் கனவாக லட்சக் கணக்கில் செலவழித்துக் கட்டிய வீட்டினை ஒரே நாளில் இரவோடு இரவாக இடித்து வெளியேற்றுவது என்பது கொடுங்கோன்மையாகும்.
ஆகவே, உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு நைனிடால் பகுதியில் வசிக்கும் இசுலாமியப் பெருமக்களின் வீடுகளை இடித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.