கூடுவாஞ்சேரி: சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிய நந்திவரம் ஆண்கள் அரசு பள்ளிக்கு இரவுநேர காவலாளி நியமிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில் நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடந்து வருவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் யாரும் கண்டு கொள்ளவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ”நந்திவரம் ஆண்கள் அரசு பள்ளி விளையாட்டு திடலில் காலை மற்றும் மாலை நேரங்களில் அனைத்து விளையாட்டுகளிலும் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிலம்பம், கராத்தே, டென்னிஸ், யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி நுழைவாயில் கேட் பூட்டப்பட்டிருப்பதால் வெளியே பைக்குகளை நிறுத்திவிட்டு சுழலும் கேட் வழியாக பலர் உள்ளே செல்கின்றனர். இதை வாய்ப்பாக பயன்படுத்தும் ஆசாமிகள் அங்கு நிறுத்திவைத்திருக்கும் பைக்குகளை திருடி செல்கின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளி காவலாளி தற்போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இரவு நேர காவலாளி இல்லாததால் சிலர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மதுஅருந்துகின்றனர். காலிபாட்டில்களை ஆங்காங்கே உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். மேலும் மாணவர்களுக்கான குடிநீர் குழாய்களை உடைத்து நாசப்படுத்தியுள்ளனர். பள்ளி விளையாட்டு திடலின் ஒரு பகுதியில் அடர்ந்த முட்புதர்கள் காணப்படுவதால் சிலர் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இரவு நேர காவலாளி நியமிக்கப்பட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.