வரலாற்றுச் சிறப்புமிக்க நவகமுவ ரஜமஹா விகாரை மற்றும் பத்தினி தேவாலயத்தில் இன்று (2023.01.04) இடம்பெற்ற சமயக் கிரியைகளில் கலந்து கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், விகாரையின் தலைமை தேரர் ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் மல்வானே பஞ்சாசார தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
நவகமுவ ரஜமஹா விஹாராதிபதி மல்வானே பஞ்சாசார தேரர் இங்கு அநுசாசன உரை நிகழ்த்தினார்.
எமது நவகமுவ விகாரையும் பத்தினி தேவாலயமும் பிரதமர் அவர்களுக்கு புதிய இடமல்ல. பிரதமரின் தாத்தா பொரலுகொட ராலஹாமி அவர்கள் நவகமுவை புனித பூமியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று இந்த இடத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்.
பிரதமர் அவர்கள் சிறுவயதிலும் பத்தினி தேவாலயத்திற்கு வருகைதந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இந்த இடத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்தார்.
இந்த நவகமுவ புனித பூமி மற்றும் பத்தினி தேவாலயம் தொடர்பில் அவர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. எதிர்காலத்திலும் அந்தக் கடமைகள் நிறைவேற்றப்படும் என்று நான் நம்புகிறேன்.
“நாட்டிற்காக நீங்கள் செய்த அர்ப்பணிப்பு மற்றும் பொறுமையின் காரணமாகவே நீங்கள் இன்று இந்த நாட்டின் பிரதமராக இருக்கின்றீர்கள். தேசத்திற்காக உளப்பூர்வமாக உழைக்கும் ஒரு நபர் என்ற வகையில் அது நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானது” என்றும் தேரர் அவர்கள் மேலும் கூறினார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தனவும் கலந்துகொண்டதுடன், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சீதாவக்க பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன மற்றும் கடுவெல மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு