கடந்த 2015ம் ஆண்டில் ரமேஷ் அரவிந் இயக்கத்தில், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் கமல்ஹாசன் நடிப்பில் ‘உத்தம வில்லன்’ படம் உருவானது. அதிக செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியினை பெறாமல் படுதோல்வியினை அடைந்தது. இதனால் படத்தின் தயாரிப்புக்குழுவிற்கு மிகப்பெரியளவில் நிதியிழப்பு ஏற்பட்டது, இந்த இழப்பிலிருந்து நிறுவனம் மீண்டெழவே வெகு நாட்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ‘உத்தம வில்லன்’ படத்தால் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதியிழப்பை ஈடுசெய்யும் வகையில் மீண்டும் அவரது தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி, கடின உழைப்பையும் பல திறமைகளையும் புகுத்தி எடுக்கப்பட்டது தான் உத்தம வில்லன்’ படம், ஆனால் இந்த படம் மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது.
முதலில் ‘பாபநாசம்’ படத்தை தான் ரீமேக் செய்ய விருப்பப்பட்டோம் ,ஆனால் கமல்ஹாசன் உத்தம வில்லனாகவே நடிக்க ஆசைப்பட்டதால் நாங்கள் இந்த படத்தை எடுத்தோம். இது அவருக்கும் தெரிந்தது தான், சமீபத்தில் நான் கமல்ஹாசனை சந்தித்தபோது அவர் ‘உத்தம வில்லன்’ படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் உங்கள் தயரிப்பு நிறுவனத்தின் ஒரு படத்தில் நடிப்பேன் என்று உறுதியளித்ததாக கூறியுள்ளார்.