டெல்லியின் சுல்தான்புரி பகுதியை சேர்ந்த இளம்பெண் அஞ்சலி , புத்தாண்டையொட்டி பணிபுரியும் நிறுவனம் சார்பில் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கான பணியை முடித்துள்ளார். புத்தாண்டுக்கு முன்தின நாளான டிசம்பர் 31-ம் தேதி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துள்ளார். பின்னர், ஜனவரி 1 புத்தாண்டு பிறந்த நிகழ்ச்சிகளை அவர் நிறைவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஓட்டலில் இருந்து புத்தாண்டு அதிகாலை 1.45 மணியளவில் ஸ்கூட்டரில் அஞ்சலி வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது சாலையில் வேகமாக வந்த கார் அஞ்சலி சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், அஞ்சலி காரின் அடியில் சிக்கிக்கொண்டார்.
அவரது உடல் காரில் சிக்கியபடி பல கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்து உள்ளது. இதன்பின் வேறொரு இடத்தில் நிர்வாண கோலத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவின்பேரில் இளம்பெண் மரணம் பற்றிய விரிவான அறிக்கையை அளிக்கும்படி டெல்லி காவல் துறை ஆணையரிடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி, டெல்லி போலீசில் சிறப்பு காவல் ஆணையாளராக உள்ள ஷாலினி சிங்கை விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.
இந்நிலையில், அஞ்சலியுடன் சம்பவத்தன்று, மற்றொரு பெண்ணும் பயணம் செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இதன்படி, அஞ்சலி வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்தும், நிதி என்ற அவரது தோழி ஸ்கூட்டியை ஓட்டியும் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் ஓட்டலில் இருந்து வெளிவரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன.
தோழிகள் இருவரும் குடிபோதையில் ஒருவருக்கு ஒருவர் தகராறில் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. இதனை அவர்கள் வெளியேறிய ஓட்டலின் உரிமையாளர் கூறிய தகவல் தெரிவிக்கின்றது. அவர்கள் இருவரும் குடிபோதையில் மோதி கொண்டனர். இதனால், சண்டை போட கூடாது என கூறினேன். அதன்பின் அவர்கள் இருவரும் நடந்து செல்லும்போதும் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனையடுத்து, அவர்களை ஓட்டலை விட்டு வெளியேற்றினேன் என அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவத்தில் அஞ்சலியின் தோழி நிதி சாட்சியாக உள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அவர் (உயிரிழந்த பெண்) குடிபோதையில் இருந்த நிலையில், வாகனம் ஓட்ட வேண்டும் என என்னிடம் வற்புறுத்தினார். எங்களை கார் மோதியதும், ஒரு புறம் நான் விழுந்து கிடந்தேன். காரின் அடியில் தோழி சிக்கி கொண்டார். காரின் கீழ் அஞ்சலி சிக்கி கொண்டார் என்பது காரில் இருந்தவர்களுக்கு தெரியும். நான் பயந்துவிட்டேன். போலீசாரிடம் எதுவும் கூறாமல் வீட்டுக்கு சென்று விட்டேன். யாரிடமும் எதுவும் கூறவில்லை என கூறியுள்ளார்.