சென்னை பள்ளிப்பட்டு பகுதியில் வசித்துவந்த சக்திவேல் என்ற திலீப்குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளார். அவருடன் ஹேமலதா என்பவரும் இரண்டு வயதுள்ள ஹரிணி என்ற குழந்தையும் வந்துள்ளனர். ஹேமலதாவை தனது மனைவி என்றும் குழந்தை ஹரிணியை மகள் என்று அக்கம்பக்கத்தில் வசித்தவர்களிடம் அறிமுதம் செய்துள்ளார்.
ஆலங்குளத்தில் உள்ள காய்கறி சந்தையில் சக்திவேல் மூட்டை தூக்கும் பணியைச் செய்துள்ளார். அவரின் மனைவி அங்குள்ள துணி்க்கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சிறுமி ஹரிணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் குணமடையவில்லை. அதனால் அங்குள்ள மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நெல்லையில் அனுமதிக்கப்பட்டபோதே சிறுமி ஹரிணிக்கு சுயநினைவு இருக்கவில்லை என சொல்லப்படுகிறது. கடந்த 31-ம் தேதி கோமா நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிறுமியின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிறுமி தவறி விழுந்ததாகப் பெற்றோர் தெரிவித்தபோதிலும் மருத்துவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம், சிறுமியின் கழுத்து நரம்பில் அடி விழுந்த அடையாளம் இருந்திருக்கிறது.
இது தொடர்பாக மருத்துவர்கள் சக்திவேல் மற்றும் ஹேமலதாவிடம் தொடர்ந்து விசாரித்திருக்கிறார்கள். அதனால் அச்சம் அடைந்த இருவரும் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டுச் சென்று விட்டனர் எனச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஹரிணி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து வந்ததாகத் தெரிவித்த சக்திவேல் கொடுத்த முகவரி உண்மையானது தானா என்பது பற்றி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இதனிடையே, ஹேமலதா உண்மையிலேயே சக்திவேலின் மனைவியா என்பதிலும் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. குழந்தை கழுத்துப் பகுதியில் பாதிப்பு ஏற்படக் காரணம் என்ன என்பது பற்றியும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.