ரத்லாம், தன் மீது பொய் வழக்கு தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டதால், தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு மத்திய பிரதேச அரசுக்கு எதிராக ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, ரத்லாம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், பாலியல் பலாத்காரம் செய்ததாக காந்திலால் பீல், ௩௫, என்பவர் மீது, ௨௦௧௮ல் புகார் கொடுத்தார்.
புகாரில், ‘காந்திலால் என்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, மற்றொருவரிடம் ஒப்படைத்தார். அந்த நபர் என்னை பல மணி நேரம் பலாத்காரம் செய்த பின் விடுவித்தார்’ எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கில், காந்திலால் பீல், ௨௦௨௦ல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த ரத்லாம் நீதிமன்றம், காந்திலால் பீல் மீதான வழக்கை ரத்து செய்து, கடந்தாண்டு அக்டோபரில் தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், ரத்லாம் நீதிமன்றத்தில் காந்திலால் பீல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டது. முறையாக விசாரணை நடத்தாமல் மாநில போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால், என் தாய், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்; உணவுக்கு திண்டாடினர்.
நானும், என் குடும்பத்தாரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். மனித வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது என்ற அடிப்படையில், ௧௦ ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு கேட்டுள்ளேன்.
வழக்கு செலவுக்கு 2 லட்சம் ரூபாய், குடும்பத்தாரின் மன உளைச்சல் போன்றவற்றுக்கும் இழப்பீடு கேட்டுள்ளேன்.
மேலும் மனிதனுக்கு கடவுள் அளித்துள்ள மிகப் பெரிய பரிசான தாம்பத்திய உறவை இழந்தேன். இதற்காக, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டுள்ளேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, வரும் ௧௦ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்