பிரபல தாதா தப்பியோட்டம்: இலங்கை அரசு பதற்றம்| Sri Lankan government is worried about famous Dadas escape

கொழும்பு: பிரபல தாதா மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர் கஞ்சிபாணி இம்ரான், இந்தியாவுக்கு தப்பிச் சென்றது, இலங்கை அரசுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, அந்நாட்டின் உளவு அமைப்பின் செயல்பாடுகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

நம் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்த பிரபல தாதா மற்றும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர் கஞ்சிபாணி இம்ரான் மீது அங்கு பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த மாதம், 20ம் தேதி அவருக்கு இலங்கை நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், அதற்கடுத்த நாள், தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக இலங்கை போலீஸ் கூறியுள்ளது.

இது குறித்து இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்தலு குணவர்த்தனே நேற்று கூறியதாவது: கஞ்சிபாணி இம்ரான் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அவர் தப்பிச் சென்றது, உளவு அமைப்பின் செயல்பாடுகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

கடந்த, 2019ல் ஈஸ்டர் தினத்தின்போது பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. அப்போது இந்திய அரசு அளித்த எச்சரிக்கையை நம் உளவு அமைப்புகள் புறக்கணித்ததால்தான், அந்த சம்பவங்களை தடுக்க முடியவில்லை. தற்போது மீண்டும் உளவு அமைப்புகள் தோல்வி அடைந்துள்ளன. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.