புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளில் விரும்புவோருக்கு யோகக்கலையை கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் 28-வது சர்வதேச யோகா திருவிழா தொடக்க விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை செயலர் குமார் வரவேற்றார். அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். விழாவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது: ‘‘யோகக்கலை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தேசத்தில் இருந்தது என்று சரித்திரம் சொல்கிறது. மற்ற நாடுகளில் மனிதர்கள் நாகரீகம் என்றால் என்ன என்றே தெரியாத காலத்தில் இந்தியாவில் யோகா பயிற்சி செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்ட பழமையான கலைதான் இந்த யோகக்கலை.
சித்தர்கள் அமர்ந்திருப்பது மட்டும் யோக நிலையல்ல, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோயில்களில் இருக்கின்ற தெய்வங்கள் யோக நிலையில் தான் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆகவே இறைவனையும், யோகத்தையும் பிரிக்க முடியாது என்பது தான் நம்நாட்டின் சரித்திரம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரதமர் மிக அழகாக இந்தக்கலையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். யோகாவுக்கும் நமக்கும் சம்மந்தமில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த சில இஸ்லாமிய நாடுகள் கூட யோகாத்தினத்தை கொண்டாடுகிறார்கள் என்றால் அதுதான் நமது வெற்றி.
தலை முதல் கால் வரை, முடி முதல் நகம் வரை உள்ள நோய்கள் எல்லாவற்றிர்க்கும் யோகாவினால் தீர்வு இருக்கிறது. ஆகவே, நமது வாழ்க்கையோடு யோகக்கலை ஒன்றியதாக உள்ளது. யோகக்கலையானது அனைத்து நோய்களுக்கும் மாற்று மருந்தாக விளங்கவில்லை. அதுவே பிரதான மருந்தாக உள்ளதை அனுபவரீதியாகவே உணரமுடியும். ஆகவே யோகக்கலையை தினமும் காலை, மாலை, வீட்டு வேலைகளின் போது என எப்போதும் பயிற்சி செய்து நலமுடன் வாழவேண்டும்.’’ என்றார்.
முதல்வர் ரங்கசாமி பேசும்போது, ‘‘யோகக்கலை என்பது இறைவன் அருளியது. உலக நாடுகளுக்கும் இந்த கலை பரந்து, விரிந்து வளர்ந்திருக்கின்றது என்றால் அதற்கு அடிப்படை நமது தமிழகம் என்பதை யாரோலும் மறந்துவிட முடியாது. சித்தர்கள் மூலம் தான் யோகக்கலை வளர்ந்துள்ளது. சித்தர்கள் அமர்ந்திருப்பது யோக நிலை.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த யோகக்கலையை கற்க வேண்டும் என்பதை கரோனா காலங்களில் தான் உணர முடிந்தது. உடலுக்கும், மனதுக்கும் அமைதியை கொடுக்கக்கூடியது யோகா. உடல் நலமுடன், மனநலமும் அமைதியாக இருக்க யோகக்கலை அவசியம்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல கோபம் உடல்நலத்தைக் கெடுக்கும். ஆகவே அமைதி என்பது உடலைக் காக்கும். அத்தகைய அமைதியைத் தருவதாக யோகக் கலை உள்ளது. மருத்துவமனை நோயாளிகளுக்கு யோகக் கலைப் பயிற்சி அளிக்க புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, யோகக்கலையை வளர்க்க பள்ளிகளில் குறிப்பிட்ட மணிநேரம் விருப்பம் உள்ளவர்களுக்கு யோகக்கலையை கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். ஆதலால் உடல், மனம் இரண்டும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் யோகாவை கற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.’’ என்று தெரிவித்தார்.
விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த யோகாக்கலை வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுற்றுலாத்துறை இயக்குநர் பிரியதர்ஷினி நன்றி கூறினார். இந்த யோகா திருவிழா வருகின்ற 7-ம் தேதி வரை யோகா திருவிழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.