புதுடில்லி, புத்தாண்டு தினத்தன்று புதுடில்லியில் நடந்த கொடூர சாலை விபத்தில் உயிரிழந்த பெண், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகவில்லை என, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
புதுடில்லியில், ஆங்கில புத்தாண்டு தினமான 1ம் தேதி அதிகாலையில் நடந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த 20 வயது பெண் கார் சக்கரத்தில் சிக்கி, 12 கி.மீ., துாரம் இழுத்து செல்லப்பட்டு கொடூரமாக உயிரிழந்தார்.
விபத்து ஏற்படுத்திய ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வு, விபத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் குற்றவாளிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் விபரம்:
விபத்தில் உயிரிழந்த அஞ்சலி சிங், நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்யும், ‘ஈவென்ட் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
டிச., 31ம் தேதி இரவு, புதுடில்லி சுல்தான்புரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த புத்தாண்டு விருந்தில் பங்கேற்றார்.
அதிகாலை, 1:45 மணிக்கு ஹோட்டலில் இருந்து, ‘ஸ்கூட்டி’ இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். சற்று துாரம் சென்றதும், அந்த சாலையில் வந்த கார் அஞ்சலி சிங்கின் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
அந்த காரை தீபக் கண்ணா என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அமித் கண்ணா, மனோஜ் மிட்டல், கிருஷ்ணன், மிதுன் என்ற நால்வர் இருந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு அவர்கள் காரை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றனர்.
விபத்தில் சிக்கிய அஞ்சலி சிங்கின் கால்கள் கார் சக்கரத்தில் மாட்டிக் கொண்டது. இது தெரியாமல் அந்த இளைஞர்கள் காரை வேகமாக இயக்கினர். உயிரிழந்த அஞ்சலி சிங்கின் உடல் சாலையில் 12 கி.மீ., துாரம் இழுத்து செல்லப்பட்டது.
காஞ்ச்ஹவாலா என்ற இடத்தில் இளைஞர்கள் காரை நிறுத்த, அஞ்சலி சிங்கின் உடல் கீழே விழுந்தது. அவர் அணிந்திருந்த ஆடைகள் கிழிந்து, அவரது உடல் நிர்வாணமாக சாலையில் கிடந்தது. பின், காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
உடலை மீட்ட போலீசார், மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லுாரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அஞ்சலியின் உடல் நிர்வாணமாக கிடந்ததால் அவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இருக்கலாம் என, அவரது தாய் ரேகா புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், அஞ்சலி சிங் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், அவரது சளி மாதிரிகள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி ஆகியவற்றை மேற்கொண்டு சோதனைக்காக போலீசார் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.
உடன் வந்த தோழியிடம் விசாரணை!
புத்தாண்டு விருந்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹோட்டலில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட அஞ்சலி சிங்குடன் அவரது தோழி நிதி என்பவர் பின்னால் அமர்ந்து பயணித்துள்ளார். இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. விபத்தில் நிதி காயம்அடையவில்லை. அஞ்சலி காரில் சிக்கிய கோர காட்சியை கண்டதும் நிதி அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளார். விபத்தை நேரில் கண்ட மிக முக்கிய சாட்சியான நிதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டுனர் வாக்குமூலம்!
காரை ஓட்டி வந்த தீபக் கண்ணா போலீஸ் விசராணையில் கூறியதாவது:நாங்கள் அனைவருமே அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்தோம். திடீரென இருசக்கர வாகனத்தில் மோதியதும் பயந்துவிட்டோம். காரை நிறுத்தினால் பிரச்னையாகி விடும் என்பதால், நிறுத்தாமல் செல்லுமாறு நண்பர்கள் கூறினர். எனவே, வேகமாக காரை இயக்கினேன். சில கி.மீ., சென்றதும் கார் அடியில் ஏதோ சிக்கி இருப்பதை போல உணர்ந்தேன். நண்பர்களிடம் கூறியதும், ‘ஒன்றுமில்லை, நிறுத்தாமல் போ’ என்றனர். ஒரு இடத்தில் காரில் சிக்கிய பெண்ணின் கையை உடன் இருந்த நண்பர் பார்த்துவிட்டார்; உடனே காரை நிறுத்தினோம். அந்த பெண்ணின் உடல் கீழே விழுந்ததும், புறப்பட்டு சென்றுவிட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்