நொய்டா: கடந்த டிச.,31ம் தேதி நொய்டாவில் கார் மோதி விபத்துக்குள்ளான மூன்று மாணவிகளில், சுவீட்டி குமாரி என்ற மாணவி மூளைச் சாவு அடைந்துள்ளார். இந்த சம்பவம் மாணவியின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக, கடந்த டிச.,31ம் தேதி, நொய்டாவின் பீட்டா 2 பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே, ஜிஎன்ஐஓடி கல்லூரியைச் சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பின்னால் வந்த கார் மூன்று மாணவிகள் மீது மோதியது. இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இதில் சுவீட்டி குமாரிக்க என்ற மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 20 வயதுடைய பி-டெக் கடைசி வருடம் படித்து வரும் சுவீட்டி குமாரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
5 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சுவீட்டி குமாரி உடலில் எந்த முன்னேற்றமும், இல்லாமல் கோமா நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று மாணவி மூளைச்சாவு அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற இருவரும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுவீட்டி குமாரியின் தாயார் கூறுகையில், அவளுக்கு மூளையில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு அதிக பணம் செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். நாங்கள் கூலித்தொழிலாளர்கள். எங்கள் மகள் படிப்பில் சிறந்து விளங்குகிறார் எனக் கூறியுள்ளார்.
புத்தாண்டு தினத்தன்று கிரேட்டர் நொய்டாவில் பின்னால் இருந்து கார் மோதியதால் மருத்துவமனையில் தங்கியிருக்கும் மாணவியின் குடும்பம் பணத்திற்காக போராடுகிறது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பீட்டா-2 போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். மாணவிகள் மீது காரை மோதி விபத்துக்குள்ளாக்கிய, குற்றவாளிகள் தலைமறைவு ஆகியுள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து, அப்பகுதி போலீஸ் அதிகாரி தினேஷ் குமார் சிங் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க மூன்று போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் எனக் கூறினார்.
அதேபோல் டில்லியில் 20 வயது பெண் ஒருவர் பைக் மீது கார் மோதியதில் கொல்லப்பட்டார், மேலும் அவர் காரில், 4 கிலோமீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதே இரவில் நடந்தது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்