பெண் காவலரிடம் பாலியல் சீண்டல்: திமுக நிர்வாகிகள் கைது!

சென்னை விருகம்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட சாலிகிராமத்தில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வரும் இளம் பெண் காவலர் ஒருவர் சக காவலர்களோடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் இரு இளைஞர்கள், அந்த பெண் காவலரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவலர் சக காவலர்களிடம் இதுகுறித்து கூற, அந்த இளைஞர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை விரட்டிப் பிடித்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும், சாலிகிராமம் மதியழகன் நகரை சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகர் அய்யப்பா நகர் அண்ணா தெருவை சேர்ந்த ஏகாம்பரம் (24) என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் 129ஆவது வட்ட திமுக இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, அவர்கள் இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டு கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் போலீசாருடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் திமுக நிர்வாகிகளை கைது செய்யாமல் அங்கேயே விட்டு விட்டுச் சென்றனர்.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். தனக்கு நேர்ந்த அவமானம் தொடர்பாக பெண் போலீஸ் விருகம் பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து, பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் இருவரும் கைது செய்யப்பட்டு, கோயம்பேடு துணை ஆணையர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்பதாக எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசலில் தங்களது கை பெண் காவலர் மீது தவறுதலாக பட்டிருக்கலாம் எனவும், தங்களுக்கு அதுபோன்ற நோக்கம் எதுவும் இல்லை எனவும், அதுபோன்ற சம்பவம் ஏதும் நடைபெற்று இருந்தால் அதற்கு பெண் காவலரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர்கள் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பெண் காவலரும்தான் அளித்த புகார் மீது மேல் நடவடிக்கை ஏதும் தேவை இல்லை என்று எழுதி கொடுத்ததாகவு, அதனடிப்படையில் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, அந்த பெண் காவலர் தனது இடுப்பை பிடித்து திமுக நிர்வாகிகள் கிள்ளியதாக புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகாருக்குள்ளான திமுக நிர்வாகிகள் இருவரையும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.