கும்பகோணம் நீதிமன்றம் முன்பாக போலீசாரை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், தன்னை சமாதானப்படுத்த வந்த மகளிர் காவல்துறையினரை, சட்டையை பிடித்து இழுத்துத்தாக்கி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் மாதுளம் பேட்டை பகுதியைச்சேர்ந்தவர் 40 வயதான அழகுக்கலை நிபுணர் செந்தாமரை. தன்னை திமுக பிரமுகர் எனக்கூறிக் கொண்ட செந்தாமரை, புதன்கிழமை மதியம் நீதிமன்ற வாசலில் சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, மறியலில் ஈடுபட்டார். காவல்துறையினர் அவரை தடுக்க முயன்றதால், காவலரை பிடித்துத்தள்ளி வாக்குவாதம் செய்தார்.
போலீசார், அந்த பெண்ணின் இரு சக்கர வாகனத்தை நகர்த்தி போக்குவரத்தை சீர் செய்தபோது, பெண் காவலரின் சட்டையை பிடித்து இழுக்க, அங்கிருந்த ஒருவர் அதனை செல்போனில் படம் பிடித்தபடியே சட்டையை பிடித்து இழுக்காதீர்கள் என, தடுத்து விடுவித்தார். பெண் வழக்கறிஞர்கள் சமாதானப்படுத்த முயன்றும், அந்தப்பெண் கட்டுப்படவில்லை.
சம்பவ இடத்திற்கு கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன் தலைமையில் வந்த காவலர்கள், செந்தாமரையை காவல் நிலையத்திற்கு அழைத்தனர். காவல் நிலையத்திற்கு வர மறுத்து ஒருமையில் பேசி, காவலர்களிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.
நேரம் செல்ல செல்ல செந்தாமரையின் அட்டகாசம் எல்லை மீறிச்சென்றதால், கூடுதல் பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு, செந்தாமரையை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். செந்தாமரையோ, அவரை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த பெண் உதவி ஆய்வாளரின் சட்டையை கொத்தாக பிடித்துக்கொண்டதால், அவரை வாகனத்தில் ஏற்ற இயலாமல், மகளிர் போலீசார் போராடினர்.
பின்னர் ஒருவழியாக அவரை இழுத்து, வாகனத்தில் ஏற்றியதால், உதவி ஆய்வாளரின் சட்டையும் கிழியாமல் தப்பியது. ரகளை செய்த செந்தாமரையை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்துச்சென்றனர்.
செந்தாமரை சில ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டில் தங்கி கார் ஓட்டுனராக வேலைபார்த்துள்ளார். அங்கு சம்பாதித்த பணத்தை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உரிய ஆவணங்கள் இன்றி கடனாக வழங்கியதாகவும், பணம் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தராததால், கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
உரிய ஆவணங்கள் இல்லாததால், தங்களால் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என போலீசார் திருப்பி அனுப்பியதால், காவல்துறையினர் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில், நீதிபதியிடம் புகார் அளிக்க வந்த செந்தாமரை, இந்த ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.