சென்னை: பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த டிச. 31-ம் தேதி இரவு திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் திமுக இளைஞர் அணியை சேர்ந்த இருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் பழனிசாமி, ஓபிஎஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக சாலிகிராமத்தை சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரை சேர்ந்த ஏகாம்பரம் (24) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் 129-வது வட்ட திமுக இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவர்கள் இருவரையும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.