சென்னை: மருத்துவமனைகளில் நோயாளிகள், அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கரோனா பரிசோதனை தேவையில்லை என்று தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
சீனா, ஜப்பான், அமெரிக்கா உட்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய பிஎப்7 கரோனா வைரஸ் பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “தமிழகத்தில் உருமாற்றமடைந்த புதிய கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும் ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள கரோனா பாதிப்புதான் இருந்தது. எனவே, கட்டாய கரோனா பரிசோதனை தற்போதைய நிலையில் தேவையில்லை.
அந்த வகையில் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கும், உள்நோயாளிகளுக்கும் கரோனா பரிசோதனை வேண்டியதில்லை. அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்” என்றார்.