ஆங்கிலப் புத்தாண்டு 2023 பிறந்துவிட்டது. நடப்பாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்
தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. நடப்பாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெறக் கூடிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் 2023-24ஆம் ஆண்டின் மாநில பட்ஜெட் குறித்தும் பல்வேறு விஷயம் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல்வேறு வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே எஞ்சியுள்ள வாக்குறுதிகளில் சாத்தியமான விஷயங்களை கருத்தில் எடுத்து கொண்டு, அவற்றை செயல்படுத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.