டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புவோர் கலந்தாய்வின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீணடித்தால் அடுத்தாண்டு நீட் தேர்வு எழுத முடியாது என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்பில் 15% இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்கள் ஒன்றிய தொகுப்பிற்கு வழங்கப்பட வேண்டும். இந்த மருத்துவ இடங்களுக்கு 2 கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்படாத இடங்கள் மீண்டும் அந்தந்த மாநில அரசுகளுக்கே திருப்பி அளிக்கப்படும்.
ஆனால், 2021-2022 கல்வியாண்டு முதல் இந்த இடங்கள் மீண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது என்று ஒன்றிய மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்தது. அதன்படி நிரப்படாத இடங்கள் வீணாவதை தடுக்க மேலும் நான்கு கட்ட கலந்தாய்வுகள் நடத்தப்படும். அப்போது ஒன்றிய தொகுப்பு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்படவில்லை எனில் அவ்விடங்கள் காலியாகவே இருக்கும். இந்த விதிமுறைக்கு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு அளித்த இடங்களில் 6 இடங்கள் வீணாகி உள்ளன. மொத்தமாக 2224 இடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவோர் தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களை கண்டிப்பாக தேர்வு செய்தே ஆக வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கான இடங்களை ரத்து செய்தால் அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுத முடியாது எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ரூ.50,000 இழப்பீட்டுத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.