மதுரை: மொபைல் போன் செயலி மூலம் போட்டோ எடுக்கப்படும் மண்ணின் வகை, ஈரத்தன்மை, பயிருக்கான தண்ணீர் தேவை உள்ளிட்ட தரவுகளை விவசாயிகள் உடனே தெரிந்து கொள்ளும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்து சர்வதேச விருது பெற்ற வாடிப் பட்டியைச் சேர்ந்த மாணவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெ.நிலவழகன். தோல் வியாபாரி. இவரது மனைவி முனைவர் பானுமதி கோவை அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ளார். கோவை காந்திபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்களது மகன் என்.சுதர்சன்(19). கோவை கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் பிடெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பாடத்திட்டத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சுதர்சன் தலைமையில் 4 நாடுகளைச்சேர்ந்த 6 மாணவர்கள் யுனெஸ்கோ நடத்திய இந்தியா – ஆப்ரிக்கா சர்வதேச ஹேக்கத்தான் 2022 போட்டியில் பங்கேற்றனர். நொய்டாவிலுள்ள கெளதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடந்த சர்வதேசப் போட்டியில் 21 நாடுகளைச் சேர்ந்த 603 மாணவர்கள் பங்கேற்றனர்.
மண்ணின் வகை, ஈரப்பதம் உள்ளிட்ட விவரங்களை மொபைல் போன் செயலி மூலம் எளிதாகக் கண்டறியும் சர்வதேச அளவிலான மென்பொருளை வடிவமைத்து என்.சுதர்சன் தலைமையிலான குழு ரூ.3 லட்சம் பணத்துடன் கூடிய விருதை வென்றது. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரிடம் சுதர்சன் விருது பெற்றார். இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளின் உயர்கல்வி அமைச்சர்கள் விழாவில் பங்கேற்றனர்.
மாணவரின் திறமையை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிச.30-ம் தேதி சுதர்சன் மற்றும் பெற்றோரை அழைத்துப் பாராட்டினார்.
இந்தச் சாதனை குறித்து மாணவர் சுதர்சன் கூறியது: சர்வதேச அளவிலான போட்டியில் 3 இந்தியர், 3 ஆப்பிரிக்க மாணவர்கள் பங்கேற்ற குழுவுக்கு நான் தலைமை வகித்தேன். 36 மணி நேரம் தொடர்ந்து செயல்பட்டு தங்கள் கண்டுபிடிப்பை சிறந்தது என்பதை நிரூபிப்பதே போட்டி.
92.5 சதவீதம் துல்லிய முடிவு: இந்த புதிய செயலி மூலம் விவசாயிகள் நேரடியாக தாங்களே மண் குறித்த தகவலை உடனே அறிந்துகொள்ளலாம். எங்கள் ஆய்வு 92.5 சதவீதம் துல்லியமான தகவல் தந்ததை நடுவர்கள் உறுதி செய்தனர். தண்ணீர் தேவையைச் சரியாக கணிப்பதால் தண்ணீர் வீணாவது தடுக்கப்படுகிறது. தேவையற்ற மின் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது.
இது போன்ற பல்வேறு காரணங்களால் எங்களது செயலி சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டு ரூ.3 லட்சம் பரிசு மற்றும் பதக்கம் கிடைத்தது. இந்த விவரங்கள் அனைத்தையும் முதல்வர் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். இதில் கூடுதல் ஆய்வுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.
எங்களது கண்டுபிடிப்பை மேலும் நவீனப் படுத்தவும், அதைச் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து அடுத்தகட்ட நகர்வுக்காக மத்திய அரசின் அழைப்புக்குக் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.