'லேசான வெயில் அடிச்சாலே போதும்; மின்சாரம் கிடைக்கும்' பிரதமர் பாராட்டிய விவசாயியின் தோட்டம் விசிட்!

பிரதமர் பாராட்டிய விவசாயி…

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எழிலன், ‘பிரதம மந்திரி குசும் யோஜனா’ திட்டத்தின்கீழ் மானியம் பெற்று சூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட் அமைத்து, விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த அக்டோபர் மாதம் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எழிலன் சூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட்டை விவசாயத்துக்கு பயன்படுத்தி வரும் முறையை குறிப்பிட்டு பாராட்டினார். ஒரு பனிபொழியும் காலையில் விவசாயி எழிலனை காணச் சென்றோம்.

மீன் குளம்

காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் பகுதியில் இருக்கும் இவரது பண்ணைக்கு நாம் செல்ல, நம்மை உற்சாகமாக வரவேற்று, தான் சோலார் பேனல் அமைத்த கதையை சொல்லத் தொடங்கினார்.

கெண்டை, வவ்வால், ஜிலேபி மீன்கள்…

“ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, என்னோட நிலத்துல மீன்பண்ணை வைக்கலாம்னு குளம் வெட்டினேன். அப்போ ஆற்காட்டில் இருக்கிற ஒரு தனியார் பண்ணையில் இருந்து 3 ரூபாய், 5 ரூபாய் விலையில மீன் குஞ்சுகளை வாங்கிட்டு வந்து குளத்துல வளர்க்க ஆரம்பிச்சோம். நல்லா வளர்ந்த மீன்களை, கூலிக்கு ஆட்கள கூப்பிட்டு வலைவிரிச்சு பிடிச்சு பக்கத்துல இருக்க சந்தையிலோ இல்ல பக்கத்து கிராமத்திலோ வித்துடுவோம். புரட்டாசி, கார்த்திகை மாசம் இல்லாம மத்த நாள்ல சந்தையில மீன்களுக்கு நல்ல டிமாண்டு இருக்கும்.

சோலார் பேனல்

இப்போ எங்க மீன் பண்ணையில கெண்டை, வவ்வால், ஜிலேபி மீன்கள் இருக்கு. எந்தெந்த சீசன்ல என்னென்ன மீனுக்கு டிமாண்டு இருக்கோ, அந்த மீன நம்ம குளத்துல வளர்த்தாதான் நல்ல வியாபாரமும் ஆகும். லாபமும் கிடைக்கும். நாங்க எப்பவுமே மீனை குட்டைக்குள் விடுறதுக்கு முன்னாடி, சாணி போட்டு பாசியை வளர விட்டுவிடுவோம். அப்போதான் நாம அடிக்கடி தண்ணீர் மாத்த வேண்டியதில்லை. அப்புறம் பொதுவாவே நாட்டு மீனுக்கு தண்ணீரை மாத்த வேண்டியதில்லை.

நாங்க மீனுக்கு ஆட்டு சாணம், மாட்டு சாணம், புண்ணாக்கு போடுவோம். இதுயில்லாம சாணிய மக்கவெச்சு அதுல வர்ற மண்புழுவையும் போடுவோம். ஸ்பைருலினா மாதிரி பாசிகள மீனுக்கு போடும்போது, மீன் கொஞ்சம் வேகமா வளரும். இப்படி சரியா திட்டம்போட்டு மீன வளர்த்து வித்தோம்னா ஆறு மாசத்துலேயே நல்ல லாபம் பாக்கலாம்” என்று அவர் கூறிக்கொண்டிருக்கும்போதே நாம் சோலார் பேனல் அமைத்திருக்கும் இடத்திற்கு வந்துவிட்டோம்.

சாணம்

அப்போது பிரதமர் மோடி பாராட்டியதைப் பற்றி கேட்கும்போது, “பிரதமர் என்ன பாராட்டுனது எனக்கு ரொம்ப சந்தோசம். ஆரம்பத்துல சின்ன குளத்துக்கு சோலார் பேனல் போட்டு ஏன் காச காரியக்கணும்னு நினச்சேன். அப்புறம் மதிப்புகூட்டல் செய்யற யோசனை இருந்துச்சு. குளத்துக்கு மட்டுமில்லாம மதிப்பு கூட்டலுக்கும் தேவைப்படும்னு யோசிச்சு, அதிகாரிகள்கிட்ட கேட்டு மானியம் வாங்கி பேனல் போட்டேன்.

சோலார் பேனல் வைக்க காரணம்…

என் நிலத்துல டீசல் மோட்டார் இருந்தப்போ, 30 அடிக்கு மேல இருக்க தண்ணிய இழுக்காது. சோலார் பேனல் போட்ட பிறகு இந்த பிரச்னை சுத்தமாவே இல்ல. கரன்ட்டும் ஏத்த இறக்கம் இல்லாம வர்றதால மோட்டரும் அடி வாங்காது. டீசல் மோட்டருக்கு தினமும் டீசல் வாங்கற செலவு இருந்துச்சு. ஆனா, இப்போ சோலார் பேனல்ல பராமரிப்பு செலவுக்கூட இல்ல. தினமும் பேனல்ல தொடச்சு வெச்ச மட்டும் போதும். மழை வந்தா அந்த வேலைகூட கிடையாது. பேனல் வேலை செய்ய உச்சி வெயில் அடிக்கணும்னு அவசியமில்லை. லேசான வெயில் இருந்தாலே போதும்” என்று அவர் சொல்லிக்கொண்டே தண்ணீர் குழாயை காட்ட சூரியன் மேகத்திற்குள் ஒளிந்திருக்கும் அந்த பொழுதிலும் சற்றும் சலனமில்லாமல் குளத்திற்குள் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது.

பாரம்பர்ய நெல்

இயற்கை விவசாயம்…

அடுத்ததாக கீழ் அம்பியில் இருக்கும் அவரது நெல் வயலுக்கு செல்ல, அங்கே ஆறடிக்கும் மேலே வளர்ந்திருக்கும் பயிர்கள் நம்மை கையசைத்து வரவேற்றது. இவரது நிலத்திற்கு அருகில் இருக்கும் கோவிலில்தான் கம்பர் அம்பிகாபதி – அமராவதி காவியம் எழுதினார் என்பது கூடுதல் சிறப்பு. வரப்பில் நடந்துகொண்டே பேசத்தொடங்கிய இவர், “எங்க பரம்பரை தொழிலே விவசாயம்தான்னு சொல்லலாம். எங்க நிலத்தில நாங்க பாரம்பரிய நெல்களை மட்டும்தான் பயிரிடுறோம். முதல்ல ரசாயன உரங்கள் போட்டுதான் விவசாயம் செஞ்சுட்டு இருந்தேன். அப்புறம் நாகலிங்க ரெட்டி மாதிரியான இயற்கை விவசாயிகிட்ட பேசுனது அப்புறம் நானும் இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன்.

முதல்ல ஆர்கானிக் விவசாயம்தான் செஞ்சேன். நவதானியங்கள் போட்டு மூடாக்கு செஞ்சு, பயோ உரங்கள் போட்டு ஆர்கானிக் விவசாயம் செஞ்சேன். முதல் சாகுபடியில எனக்கு மகசூல் குறைவாத்தான் கிடைச்சுது. அதுல மார்கெட்டிங் பிரச்னை வேற வந்துச்சு. அப்போ அரிசிய செமி-பாலிஷ் செஞ்சும் பாலிஷ் செய்யாமயும் ரெண்டு வகையா அரிசிய விக்க ஆரம்பிச்ச பிறகு நல்ல வரவேற்பு கிடைச்சுது” என்று சொல்லும் இவர் மாநில விவசாய சங்கத் துணைதலைவர் ஆவார்.

பாரம்பர்ய நெல் வயலில்

“முதன்முதலா பாரம்பரிய நெல்களை போடும்போது மதுரை, திருச்சி, ஆந்திரா, கர்நாடகால இருந்து நெல் வாங்கிட்டு வந்து விதைச்சோம். ஆனா இப்போ தமிழ்நாட்டு வகை நெல்ல மட்டும்தான் வயல்ல போடறேன். அறுபதாம் குறுவை, மாப்பிள்ளைச் சம்பா, யானை கவுனின்னு எல்லா நெல்லும் எங்க வயல்ல இருக்கு. அதுமட்டுமில்லாம 3 அடில இருந்து 10 அடி வரை பயிர்கள் இருக்கு.

நெல்லை பயிரிடும்போது என்ன பிரச்னைனா சீக்கிரம் வண்டு வந்துடும். அதனால வசம்பு, வேப்பிலையை வயல்ல போட்ருவோம்.

நெல் பயிர்

எங்க வயல்ல நெறையா மண்புழு இருக்கு. அதனால எங்களுக்கு நல்ல லாபம் தான். மண்புழு நிலத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அப்புறம் அதோட கழிவுகள் மண்ணுக்கு நெறைய பாக்டீரியாக்களை உருவாக்கி தருது. பொதுவாவே ஒருநாளைக்கு மண்புழு நெறைய தடவ மண்ணுக்கு மேலயும் கீழயும் போய்ட்டு வர்றதால, நமக்கு ப்ரீ ஏர் ஓட்டல் கிடைக்குதுனே சொல்லலாம்” என்று தனது நிலத்தில் உள்ள மண்புழு எச்சங்களை காட்டுகிறார்.

“இப்போலாம் களை எடுக்க ஆட்களே கிடைக்கறதுல இல்ல. இதனால களை வயல்ல வளராம தடுக்கறது நல்லது. அதுக்காக நம்ம நிலத்துல நீல பச்சை பாசி, அசோலா மாதிரியான பாசிகளை வளர்க்கலாம். நாங்க எங்க வயல்ல அசோலாவை வளர்க்கறோம். இப்படி வளர்க்கறது களைய மட்டுமில்லாம மண்ணுல இருக்கும் ஈரத்தையும் காக்கும்.

மரம் வளர்ப்பு

மார்க்கெட்டிங் பொறுத்தவரை, நாங்க இப்போ தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்த தொடங்கியிருக்கோம். இதுல அரிசிய பேக்கிங் போட்டு, அதுமேல அந்த அரிசிய யாரு விளைவிச்சாங்கிறதும் அவங்க போன் நம்பரும் போட்ருவோம். எங்க அரிசிய சாப்பிட்டவங்க டேஸ்ட் ரொம்ப பிடிச்சிட்டதால, நெறைய பேர் ரெகுலர் கஸ்டமர் ஆயிட்டாங்க என்று அவர் கூற, அவரிடமும் அவரது வயலிடமிருந்தும் விடைபெற்று நாம் கிளம்பினோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.