புரட்சிகர வசனங்களினாலும் அதிரடியான சண்டைக் காட்சிகளாலும் தமிழ்த் திரையுலகின் `புரட்சிக் கலைஞராக’ வலம் வந்தவர் விஜயகாந்த். கண்கள் சிவக்க, கைகள் முறுக்க சினிமாவைப் போலவே அரசியலிலும் பல அதிரடிகளை நிகழ்த்திக் காட்டியவர். ஒரு காலத்தில் கணீர் குரலாலும் கம்பீரத் தோற்றத்தாலும் தனது ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் ராஜநடை போட்டுக்கொண்டிருந்தவர், இப்போது உடல் நலக்குறைவால் பேச வார்த்தையில்லாமலும் எழுந்து நிற்க பலமில்லாமலும் வீல் சேரில் அமர்ந்திருக்கும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். முன்பு `கேப்டன்… கேப்டன்….’ என மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்த தொண்டர்கள், இன்று தழுதழுத்தக் குரலில் கண்ணீர் ஏந்தி நிற்பதைக் காணும்போது `காலம்தான் எவ்வளவு கொடுமையானது’ என்ற வரிகளே நினைவுக்கு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கட்சி கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் என பெரும்பாலும் பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்து வந்தார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டிலேயே ஓய்வெடுத்துவந்தார். அவருக்குப் பதிலாக அவரின் மனைவி பிரேமலதா கட்சிப் பணிகளை பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருந்தார். உடல்நலம்தேறி மீண்டு வருவார் விஜயகாந்த் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீண்ட காலமாக இருந்துவந்த நீரிழிவு நோய் பிரச்னையால் அவரின் வலது காலில் உள்ள விரல்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் நடப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 15 இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக சென்னை கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் அழைத்து வரப்பட்டார். அப்போது அவரைக் கண்ட தொண்டர்கள் உணர்ச்சி பெருவசத்தால் கண்ணீரில் மூழ்கியக் காட்சிகள் இணையதளங்களில் வைரலானது. இந்த நிலையில், பல மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் தொண்டர்களை சந்தித்திருக்கிறார் விஜயகாந்த். ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டன்றும் விஜகாந்த் தனது தொண்டர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் ஜனவரி 1-ல் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் தொண்டர்களை சந்திப்பதற்காக கோயம்பேடு தலைமை அலுவலகத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டார்.
விஜயகாந்தைக் காண்பதற்காக அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அவரின் தீவிரத் தொண்டர்கள் குடும்பத்தோடு கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் முகாமிட்டனர். மதியம் 11 மணிக்கு மேல், கட்சி அலுவலகத்தின் முகப்பில் தொண்டர்கள் கூடியிருக்க, அவர்கள் முன்பாக விஜயகாந்த்தை வீல் சேரில் அமர்த்தி அழைத்து வந்தார்கள் அவரின் இரு மகன்களான சண்முகப் பாண்டியனும், விஜய பிரபாகரனும். அலுவலகம் முழுவதும் `கேப்டன்.. கேப்டன்..’ என்ற கோஷத்தால் நிரம்பி வழிந்தது.
அவரைப் பார்த்த உடனேயே அங்கிருந்த ரசிகர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுததை காண முடிந்தது. மேலும் சிலர், “என் வாழ்நாள் பயனை அடைந்து விட்டேன், என் தெய்வத்தை என் கண்களால் பார்த்து விட்டேன்” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தனர்.
மகன்களும் அருகிலிருக்கும் நிர்வாகிகளும் உதவி செய்ய, வெற்றி முத்திரை காண்பித்தபடி கைகளை மேலே உயர்த்தி அசைத்தார். விஜயகாந்த் நிலைதடுமாறி சேரிலிருந்து முன்னால் விழுந்துவிடாதபடி, அவரின் மகன் சண்முகப் பாண்டியன் பத்திரமாக இரு தோள்பட்டைகளைப் பிடித்துக்கொண்டார்.
மற்றொரு கட்சி நிர்வாகி கால்களின் நிலைகளைச் சரிசெய்தார். இந்தக் காட்சிகளைக் கண்ட தொண்டர்கள் `எப்படி இருந்த தலைவர்…’ என உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டனர். தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் தொண்டர்கள் முன்பாக வீல் சேரில் அமர்ந்திருந்த விஜயகாந்த், சிரமப்படுவதைப் பார்த்துவிட்டு அவரை உள்ளே அழைத்துச் சென்றனர் நிர்வாகிகள். அதன்பின்னர் வந்திருந்த அனைத்து தொண்டர்களுக்கும் விஜயகாந்த்தின் புத்தாண்டு பரிசாக ரூ.100 வழங்கப்பட்டது. அதன்பின்னர் பிரேமலதாவின் பத்திரிகளையாளர்கள் சந்திப்புடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. அதையடுத்து, நடிகர் சத்யராஜ், தியாகு உள்ளிட்டோர் விஜயகாந்தை வீட்டுக்குச் சென்று சந்தித்தனர்.
இந்தநிலையில், “உடல்நிலை சரியில்லாத விஜயகாந்த்தை வலுக்கட்டாயமாக வரவழைத்து சிரமத்துக்குள்ளாக்குகிறார்கள்” என சமூக வலைதளங்களில் பலர் எதிர்மறையாக விமர்சனம் செய்துவருகின்றனர். இதற்கு தே.மு.தி.க பொருளாளரும், விஜயகாந்த்தின் மனைவியுமான பிரேமலதா கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “கேப்டன் நன்றாக இருக்கிறார். அவருக்குப் பேசுவதற்கும் நடப்பதற்கும் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை. இருந்தாலும் தனது தொண்டர்களை சந்திக்க வேண்டும் என விரும்பியது தலைவர்தான். அனைவரையும் பார்க்கவேண்டும் என்பது அவரின் ஆசை. அதற்காகவே புத்தாண்டு தினத்தன்று சந்தித்தார். சந்தித்ததில் கேப்டனுக்கும் தொண்டர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. தொடர்ந்து முக்கியமான நிகழ்ச்சிகளில் கேப்டன் நிச்சயம் கலந்துகொள்வார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலளித்திருந்த பிரேமலதா, “நாங்கள் அவரை வெளியில் காண்பித்தாலும் நெகடிவ்வாக ப்ரொஜெக்ட் செய்கிறார்கள்; சரி வீட்டில் ஓய்வில் இருக்கட்டுமே என வைத்திருந்தாலும் கூட `எங்கள் கண்ணிலேயே காட்டவில்லை; எங்களை சந்திக்க அனுமதிக்கவில்லை’ என அதையும் நெகடிவ்வாக ப்ரொஜெக்ட் செய்கிறார்கள். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும்போதுதான் அது எவ்வளவு பெரிய வலியைக் கொடுக்கும் என்பது தெரியும்!” என உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார்.