விழுப்புரம்: பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம்; வி.ஏ.ஓ-வைக் கையும் களவுமாகப் பிடித்த விஜிலென்ஸ்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் சென்னையிலுள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், சுப்பிரமணி என்பவரிடமிருந்து 6.5 சென்ட் நிலத்தை அசோக்குமார் வாங்கியிருக்கிறார். எனவே, அந்த இடத்துக்கான பட்டாவைத் தன் பெயருக்கு மாற்றம் செய்துகொள்ள விண்ணப்பித்திருக்கிறார். மேலும், ஓங்கூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருக்கும் கருணாகரன், ஒலக்கூர் கிராமத்துக்கும் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராகப் பதவிவகித்து வந்திருக்கிறார்.

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் – விழுப்புரம்

அவரை அணுகிய அசோக்குமார், பட்டா மாற்றம் குறித்துப் பேசியிருக்கிறார். ஆனால், அந்த அரசு அதிகாரியோ பட்டா மாற்றம் செய்வதற்கு 5,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குப் புகார் தெரிவித்திருக்கிறார். அதன்படி அசோக்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ஓங்கூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே மறைந்திருந்தனர்.

கருணாகரன்

அசோக்குமாரிடமிருந்து வி.ஏ.ஓ கருணாகரன் லஞ்சப் பணத்தை பெற்றபோது, டி.எஸ்.பி பாலசுந்தர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் ந்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.