இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் போலி குற்றச்சாட்டினால் சிறை தண்டனை அனுபவித்ததற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கூலித் தொழிலாளி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
போலி குற்றச்சாட்டு
மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர் காந்தீலால்(35). இவர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் மீது கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புகாரில் கூறப்பட்ட இன்னொரு நபர் தப்பியோடிய நிலையில் காந்தீலால் 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அவர் சுமார் இரண்டு ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்தார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் காந்தீலால் விடுதலை செய்யப்பட்டார்.
போலி குற்றச்சாட்டினால் 666 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், தனக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய பிரதேச அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில் குடும்ப வாழ்க்கை இழப்பு மற்றும் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இழப்பு மற்றும் மனிதர்களுக்கு கடவுள் கொடுத்த வரமான பாலியல் இன்பம் அடைய விடாமல் தடுத்தல் ஆகியவற்றிற்காக 10 ஆயிரம் கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சிறை வாழ்க்கை வேதனை
மேலும் இதுகுறித்து காந்தீலால் கூறுகையில், ‘இரண்டு ஆண்டு சிறைவாசத்தின் போது நான் அனுபவித்த துன்பங்களை என்னால் விவரிக்க முடியாது.
சிறையில் உடைகள் இல்லாமல் வெப்பம் மற்றும் குளிர் போன்ற தீவிர காலநிலையை எதிர்கொண்டேன்.
சிறையில் இருந்தபோது தோல் நோய் மற்றும் வேறு சில நோய்களை எதிர்கொண்டேன். விடுதலையான பின்னரும் வேதனைப்படுத்தும் நிரந்தர தலைவலி ஏற்பட்டது’ என தெரிவித்துள்ளார்.