“அடிப்படை நாகரிகம் இல்லாத அண்ணாமலையை பாஜக திருத்துமா?” – கே.பாலகிருஷ்ணன்

சென்னை: “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒன்றிய அரசில் இருக்கிறோம் என்ற பொறுப்பே இல்லாமல், அடிப்படை நாகரிகமும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக கூச்சல் எழுப்புவது மக்களின் அறிந்துகொள்ளும் உரிமையை‌ காலில் போட்டு மிதிப்பதாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் முதிர்ச்சியற்று நடந்துகொண்டதை பார்த்தேன். பாஜகவில் இருந்தவரான காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகள், பாஜகவில் செயல்படும் பெண்களுக்கு எதிரான ஒழுக்கக் கேடு தொடர்பானவை மட்டுமல்ல, சட்டப்படி கிரிமினல் நடவடிக்கைக்கு உரியவை. அது பற்றி ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு நாகரிகமான முறையில் பதில் கொடுத்திருக்க முடியும். ஆனால், அதனை விடுத்து எதை எதையோ பேசி வம்பு வளர்த்திருப்பது உறுத்தலாக இருக்கிறது.

சில நாட்கள் முன்பு அவர் கட்டியிருக்கும் கைக்கடிகாரம் எப்படி வாங்கப்பட்டது என்ற கேள்வி வந்தது. இந்த தேதியில், இவ்வாறு வாங்கினேன் என்று எளிதாக பதில் சொல்லியிருக்க முடிந்த கேள்விதான் அது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் விமானத்தின் பாகங்களில் செய்த கடிகாரம், இதை கட்டுவதுதான் தேசபக்தி என்று எதையெதையோ கதைக் கட்டினார்.


— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) January 5, 2023

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம், மாநில கல்வி நிறுவனங்களின் முடிவில் மூக்கை நுழைத்தல், நிதி ஒதுக்கியும் கட்டுமானப் பணிகள் தொடங்காத மதுரை எய்ம்ஸ், அதலபாதாளத்தில் நாட்டின் பொருளாதாரம் என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவரிடம் எழுப்ப வேண்டியுள்ளது. ஒன்றிய அரசில் இருக்கிறோம் என்ற பொறுப்பே இல்லாமல், அடிப்படை நாகரிகமும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக கூச்சல் எழுப்புவது மக்களின் அறிந்துகொள்ளும் உரிமையை‌ காலில் போட்டு மிதிப்பதாகும்.

ஊடகங்களை மிரட்டியும், உருட்டியும் வரும் போக்கினை பத்திரிகையாளர் சங்கங்கள் பல முறை கண்டித்துள்ளன. அவர்‌ திருந்தவில்லை. அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா?” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டவர்களின் பெயர், எந்த சேனல் என்பது குறித்த விவரங்களைக் கூறினால்தான் பதில் அளிப்பேன் என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.