சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து
தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு, ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கேவியட் மனுக்களையும் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஸ் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான இந்த வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புவதாக உச்ச நீதிமன்றம் நேற்றைய விசாரணையின் போது கருத்து தெரிவித்து வழக்கை இன்று தள்ளி வைத்திருந்தது.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கானது இன்று மீண்டும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா மறைவிற்குப் பின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருந்தால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவி தேவைப்பட்டிருக்காது அப்போத செய்யாத எடப்பாடி தற்போது பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர முயல்வது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது என
தரப்பில் வாதிடப்பட்டது.
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி. ஆனால் அதை “குறுக்கு வழியில்” எடப்பாடி பழனிசாமி பெற முயல்கிறார் என ஓபிஎஸ் தரப்பு கடுமையான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் முன்வைத்தது. எடப்பாடி மட்டுமே அணியக்கூடிய சட்டை அவசர அவசரமாக அதிமுக பொது குழுவில் தைக்கப்பட்டு அது எடப்பாடிக்கு மாட்டிவிடப்பட்டது என எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியது.
கட்சித் தலைமை அலுவலக பொறுப்பில் 10 ஆண்டுகள் இருந்தவர்கள் தான் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பு சுட்டிக்காட்டியது.
விதிமுறைகளை உரிய முறையில் மாற்றம் செய்யாமல் பழனிசாமி தரப்பினர் அவசரத்தில் எடுத்த முடிவுகளால்தான் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் இருக்கக்கூடிய கட்சியில் வெறும் 2,500 பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவை எப்படி அங்கீகரிப்பது? எனவும் ஓ.பி.எஸ் தரப்பு கேள்வி எழுப்பியது. அதேபோல், எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து. நாளை அனைத்து தரப்பினரும் வாதங்களை நிறைவு செய்ய அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு தொடர்பான விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளது.