சிவகாசி: தமிழக அரசின் கொள்கை முடிவு மற்றும் அரசியலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலையிட கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 4 நாள் நடைபெறும் கிராமிய திருவிழாவை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், குதிரை பூட்டிய ரேக்ளா வண்டியில் சென்று நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் தமிழக அரசு சார்பில் தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை அரசியலாக பார்க்கக் கூடாது.
நமது பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்க இதை மிகப்பெரிய விழாவாக பார்க்கிறேன். வரவேற்கிறேன். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவிற்கு அனுமதி கொடுப்பதுதான் ஆளுநரின் வேலை. தமிழக அரசின் கொள்கை முடிவு மற்றும் அரசியலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலையிடக் கூடாது. தமிழக அரசியல் குறித்து ஆளுநருக்கு புரிதல் இல்லை. ஆளுநர் தமிழக அரசின் நிர்வாகத்தை கண்காணிக்கலாம். ஆனால், அரசியலில் ஈடுபடக் கூடாது. விருதுநகர் மருத்துவக்கல்லூரிக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.