புதுச்சேரி: புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
புதுவையில் வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப் பணி கடந்த ஆண்டு டிசம்பர் வரை நடந்தது. வாக்காளர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகள், ஆட்பேசனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை பிராந்தியத்தில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 27 ஆண், 4 லட்சத்து 7 ஆயிரத்து 430 பெண், 122 மூன்றாம் பாலினம் என மொத்தம் 7 லட்சத்து 70 ஆயிரத்து 579 வாக்காளர்கள் உள்ளனர்.
காரைக்கால் பிராந்தியத்தில் 75 ஆயிரத்து 308 ஆண், 87 ஆயிரத்து 142 பெண், 22 மூன்றாம் பாலினம் என ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 472 வாக்காளர்களும், மாகேவில் 13 ஆயிரத்து 157 ஆண், 16 ஆயிரத்து 493 பெண் என 30 ஆயிரத்து 650 வாக்காளர்களும், ஏனாமில் 18 ஆயிரத்து 790 ஆண், 20 ஆயிரத்து 104 பெண் என 38 ஆயிரத்து 894 வாக்காளர்களும் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி புதுவை மாநிலத்தில் மொத்தம் 4 லட்சத்து 71 ஆயிரத்து 282 ஆண், 5 லட்சத்து 31 ஆயிரத்து 169 பெண், 144 மூன்றாம் பாலினம் என மொத்தம் 10 லட்சத்து 2 ஆயிரத்து 595 வாக்காளர்கள் உள்ளனர். இந்த இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தவர்கள், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பப்பட உள்ளது.