இலங்கைக்கு கடன்கொடுத்தோருடன் மேற்கொள்ளப்படும் தொடர்பு விடயத்தில் தற்போது
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இன்று (05.01.2023) இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு முக்கியமான ஒப்பந்தம் 2023 ஆம்
ஆண்டின் ஆரம்பக் காலப்பகுதியில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக
வங்கி கூறியுள்ளது.
கட்டமைப்பு ரீதியான பொருளாதார தடை
பல தசாப்தங்களாக பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் நிலவிய கட்டமைப்பு ரீதியான
பொருளாதார தடைகளும், பொருளாதார அதிர்ச்சிகளுமே இன்றைய நிலைக்கு காரணம் என்று
மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக அரசாங்கமும் மத்திய வங்கியும் 2022 ஆம் ஆண்டில் பெரும்
பொருளாதார சமநிலையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட வலிமிகுந்த, ஆனால்
தவிர்க்க முடியாத கொள்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது என்றும் மத்திய
வங்கி தெரிவித்துள்ளது.
அந்நியச் செலாவணி பற்றாக்குறை
பணவீக்க அழுத்தங்கள் மோசமடைவதைத் தடுக்க வட்டி விகிதங்களின் ஊடாக பணவியல்
கொள்கை இறுக்கப்பட்டது.
அத்துடன் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையின் மத்தியில் வெளிநாட்டுக்
கடனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் எரிபொருள், நிலக்கரி, சமையல் எரிவாயு, மருந்து மற்றும்
உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு அந்நிய செலாவணி
கிடைப்பதை உறுதிசெய்து, சமூகப் பொருளாதார அமைதியின்மையை அதிக அளவில் தணிக்கும்
என்ற நம்பிக்கையை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.