சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியுள்ளார்.
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ இன்று (ஜன.5) வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்க இருக்கிறோம். மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசிடம் இருந்து தகவல் தெரிவிப்பார்கள். அந்த தகவல் வந்தபின்னர் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும்.
தேர்தல் ஆணைய விதிகளின்படி, சட்டமன்றத் தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். எனவே, தேர்தல் ஆணையம் என்ன கூறுகிறார்களோ அதன்படி தேர்தல் தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, பெரியாரின் கொள்ளுப்பேரனும், ஈவிகேஎஸ்.இளங்கோவன் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் நேற்று காலமானார்.