'ஏழைகள் மீது பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை' – ஜெய்ராம் ரமேஷ் சாடல்!

“ஏழைகள் மீது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு அக்கறை இல்லை,” என, காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

நாடு முழுவதிலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் 9 கோடி பணியாளர்களும் தங்களின் வருகையை இனி மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று ஊரகவளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கு பதிலாக, எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

வேலையாட்கள் தங்களின் கூலியைப் பெறுவதில் சிக்கலை உருவாக்கும். விலையுர்ந்த ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள், குறிப்பாக பெண்கள், விளிம்புநிலை மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை இழப்பார்கள். சுருக்கமாக, கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் இந்த நடவடிக்கை காரணமாக அதன் மதிப்பை இழக்கும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் செலவினங்களைக் குறைப்பதற்காக மோடி அரசு எடுத்திருக்கும் இந்த கொள்ளைப்புற நடவடிக்கை ஏழைகள் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். இந்த நடவடிக்கை ஊழலுக்கு வழிவகுத்து ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியின மக்கள் தங்களின் அதிகாரத்தை இழக்கச் செய்யும்.

மொபைல் செயலி மூலம் வருகையை பதிவு செய்யும் போது ஆவணங்கள் அனைத்தும் மொபைலிலேயே இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட வேலைகளுடன் தொடர்புடையதாக ஊதியம் உள்ளது. ஆனால், செயலியில் இது குறித்த விவரங்கள் இல்லை. இந்த புதிய முறை நடைமுறைக்கு ஏற்றது இல்லை என்பது மட்டுமல்ல, இது வெளிப்படைத்தன்மையை குலைக்கிறது.

முந்தைய நடைமுறையில் அனைவரும் வேலைக்கு வரும்போது கையெழுத்திட வேண்டும். இது சமூக தணிக்கைக்கும் உட்பட்டுத்தப்பட்டது. புதிய செயலியின் மூலம், சர்வர் செயலிழந்திருக்கும் போது, தொழிலாளர்கள் வேலை மற்றும் ஊதியத்தை இழக்கும் வாய்ப்பு அதிகம். அதே போல் குழு படம் எடுப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியது இருக்கும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உணவு தானியங்களை பாதியாகக் குறைக்கும் நடவடிக்கையுடன் இது இணைந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று, மத்திய அரசின் தவறான பொருளாதார மேலாண்மை ஆகியவை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை எளிய மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டமும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டமும் உள்ளன. இந்த இரண்டு திட்டங்களின் மீதும் நடத்தப்பட்டிருக்கும் இரட்டைத் தாக்குதல் காரணமாக ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனினும், இது குறித்து பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை என்பதை இந்த நடவடிக்கைகள் தெளிவான உணர்த்துகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.