கரூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் போதைப்பொருள்களின் விற்பனையைத் தடுப்பதற்கு, கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், தொழிற்பேட்டை, காந்திகிராமம், கணபதிபாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அப்படி, கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸார் நடத்திய விசாரணையில் கரூர், பசுபதிபாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் மகேந்திரன் (37) என்பவரை, கரூர் தான்தோன்றிமலை காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன், வழக்கு பதிந்து கைதுசெய்தார். அவரிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போதை மாத்திரை விற்றதாக கைதுசெய்யப்பட்டிருக்கும் மகேந்திரன், அ.தி.மு.க கரூர் மத்திய நகர பாசறை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே, கைதுசெய்யப்பட்ட மகேந்திரன்மீது காவல்துறை பொய் வழக்கு பதிந்து, அவரைக் கைதுசெய்திருப்பதாகக் கூறி, அவரை விடுவிக்க வேண்டும் என்று மகேந்திரனின் மனைவி ரம்யா, தாய் அமுதா மற்றும் உறவினர்கள் சேர்ந்து, கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் கலைந்து செல்லவில்லை. அதையடுத்து, போலீஸார் அவர்களையும் கைதுசெய்ய இருப்பதாகக் கூறியதால், வேறுவழியில்லாமல் அவர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.