கவனிக்க ஆள் இல்லாததால் வயதான தம்பதி தற்கொலை

நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே அரியாகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(65). இவரது மனைவி பாப்பா (60). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி பெரியமணலி மற்றும் ஆட்டையாம்பட்டியில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். முருகேசனும், பாப்பாவும் அப்பகுதியில் உள்ள அப்பளம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இருவரும் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகேசனுக்கு குடல் இறக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், வீட்டில் சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் வேலைக்கு சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன், முருகேசனுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. பாப்பாவுக்கும் வயதானதால் முருகேசனை சரிவர கவனிக்க முடியவில்லை. இதனால், இருவரும் மனவேதனையில் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.