தெஹ்ரான்: ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி குறித்து கார்ட்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டோவிற்கு அந்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், தெஹ்ரானில் உள்ள பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பாரீஸில் செயல்படும் சார்லி ஹெப்டோ வார இதழ் சில நாட்களுக்கு முன்னர் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியை சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “மதம் மற்றும் அரசியல் அதிகாரத்திற்கு எதிராக கார்ட்டூன்களை வெளியிடும் பிரான்ஸ் பத்திரிகையின் அவமானகரமானதும், அநாகரிகமானதுமான செயலுக்கு உரிய பதில் அளிக்கப்படாமல் இருக்காது. முதல்கட்டமாக தெஹ்ரானில் உள்ள பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரான்ஸ் அரசு கம்பளத்தின் மீது நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் நிச்சயமாக தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக ஈரான் பிரான்ஸ் தூதர் நிக்கோலஸ் ரோச்சுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் செயல்படும் சார்லி ஹெப்டோ இதழ், நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் படத்தை வெளியிட்டது. இது மத்திய கிழக்கு நாடுகளில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்வினையாக சார்லி ஹெப்டோ இதழ் அலுவலகத்துக்கு நுழைந்த தீவிரவாதிகள், பத்திரிகையின் ஆசிரியர், கார்டூனிஸ்ட் என 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்த பல்பொருள் அங்காடியில் புகுந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது நினைவுகூரத்தக்கது.