டோக்கியோ : டோக்கியோவில் இருந்து வெளியேறி கிராமங்களுக்கு செல்வோரின் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ரூ.6.20 லட்சம் பரிசாக வழங்கப்படுமென ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மக்கள்தொகை அதிகரிக்கிறது. மேலும் வயதானவர்கள் அதிகரிப்பு குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவால் பெரிய நகரங்களான ஒசாகா டோக்கியோ தடுமாறி வருகிறது. இதற்கு தீர்வு காண சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டத்தை அரசு துவக்கியுள்ளது. டோக்கியோவின் முக்கியமான 23 பகுதிகளில் வசிப்போர் கிராமங்களுக்கு சென்றால் அவர்களின் குழந்தைகளுக்கு தலா ரூ.6.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் முதல் நிதியுதவி வழங்கப்படும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் புதிய பகுதியில் குடியிருக்க வேண்டும். குடும்பத்தின் ஒரு உறுப்பினர் வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது அங்கு புதிதாக தொழிலை துவங்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதை ஏற்று 2019ல் 71 குடும்பங்கள் மற்றும் 2020ல் 290, 2021ல் 1184 குடும்பங்கள் டோக்கியோவை விட்டு வெளியேறினர். இந்த முறை பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2027ம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் குடும்பங்கள் டோக்கியோவில் இருந்து கிராமப்புறங்களுக்கு இடம் மாறுவர் என அரசு நம்புகிறது.
ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 2020–21ல் 6 லட்சத்து 44 ஆயிரம். 2022ல் ஜனவரி முதல் செப்டம்பர் வரை 6 லட்சம் பேர் மட்டுமே பிறந்துள்ளனர். குழந்தை பிறப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆனால் நூறு வயதை கடந்தவர்கள் 1963ல் 153 பேராக இருந்தது தற்போது 90 ஆயிரமாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement