நெமிலி: நெமிலி அருகே கொசஸ்தலை ஆற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த காரியகுடல் மற்றும் கீழ் வெங்கடாபுரம் பகுதி இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் 155 மீட்டர் நீளம் 1 மீட்டர் உயரம் கொண்ட தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணையில் 19.906 கனஅடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இதன்மூலம் கீழ்வெங்கடாபுரம், ஆட்டுப்பாக்கம், சயனபுரம், கரியாகுடல் ஆகிய கிராமங்களை சுற்றி உள்ள 1,221 ஹெக்டேர் பரப்பு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த தடுப்பணை பணிகள் 50 சதவீதம் நிறைவேறியுள்ளது.
இந்த பணிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள், அவற்றின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது தடுப்பணையின் முழு பணிகளும் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருமால்பூர் கோவிந்தவாடி கால்வாய் அருகே விருகசீல நதியின் குறுக்கே கடந்த 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது 10 கண் மதகு கதவுகள் பழுதானது. இந்த கதவுகள் கலெக்டர் உத்தரவின்பேரில் நீர்வளத்துறை மூலம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அதேபோல் பள்ளூர் வரத்து கால்வாய் மதகு, தக்கோலம் கொண்டத்தில் உள்ள தலை மதகு உள்பட ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் மதகு பழுது பார்ப்பு பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரபாகரன், உதவியாளர்கள் சந்திரன், தமிழ்ச்செல்வன், பொய்யழகன், உதவி அலுவலர்கள் கோபி, வருவாய் அலுவலர்கள் சுந்தரம், மருதாச்சலம், ஊராட்சி மன்ற தலைவர் துலுக்கானம், ஒன்றிய கவுன்சிலர் சுகுமார், கிராம அலுவலர்கள் பாஸ்கரன், ரின்சி, கோகிலா, புகழேந்தி உட்பட பலர் உடன் இருந்தனர்.