திருவனந்தபுரம்: சபரிமலையில் அரவணை பாயசம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமில்லாதது என்று கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை செல்லும் பெரும்பாலான பக்தர்கள் அரவணை பாயசம் மற்றும் அப்பம் ஆகியவற்றை வாங்காமல் திரும்புவதில்லை. ஒரு சிறிய டின் அரவணை பாயசத்திற்கான விலை ரூ.65 ஆகும். இந்தநிலையில் அரவணை பாயசம் தயாரிப்பதற்கு தரமில்லாத ஏலக்காய் பயன்படுத்தப்படுவதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ஒரு தனியார் நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதன்படி ஆய்வு நடத்திய சபரிமலை சிறப்பு ஆணையாளர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளார். அதில், அரவணை பாயசம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஏலக்காயில் தரம் இல்லை என்றும், பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவில் அதில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
தேவசம் போர்டு மறுப்பு இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியது: சபரிமலையில் பிரசாதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் அனைத்தும் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதித்த பிறகே பயன்படுத்தப்படுகிறது. இதில் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.