கடந்த சில வாரங்களாக, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. அதனால், சி.ஆர்.பி.எஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 1,800 வீரர்களை மத்திய அரசு அங்கு அனுப்பியிருக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில வாரங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில், துணை ராணுவப் படை வீரர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிப் பொதுமக்களும் உயிரிழந்திருக்கிறார்கள்.
2023-ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி மாலை 7 மணியளவில் ரஜோரியில் ஒரு பயங்கரச் சம்பவம் அரங்கேறியது. காட்டுப் பகுதியிலிருந்து துப்பாக்கிகளுடன் வந்த இரண்டு பயங்கரவாதிகள் மூன்று வீடுகளுக்குள் புகுந்து, நான்கு அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்தனர். வீடுகளுக்குள் இருந்தவர்களின் ஆதார் அட்டைகளை வாங்கிப் பார்த்து, அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிசெய்துகொண்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
“பத்து நிமிடங்களில் துப்பாக்கிச்சூடு நின்றுவிட்டது. அப்பர் டாங்ரியில் ஒரு வீட்டில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். பின்னர், 25 மீட்டர் தூரம் சென்று, அங்கிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். பிறகு, இன்னொரு வீட்டில் இருந்தவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். அந்தத் தாக்குதலில், 10 பேர் உடல்களில் குண்டுகள் பாய்ந்தன.
அவர்கள், ரஜோரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் வழியில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்தவர்கள் விமானம் மூலம் ஜம்முவுக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்” என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இரண்டு பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினரும் துணை ராணுவப் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக கூடுதல் டி.ஜி.பி தெரிவித்திருக்கிறார்.
அண்மைக்காலமாக, காஷ்மீரில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தத் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து வியாபாரிகள், அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். பதற்றம் நிறைந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள், பாகிஸ்தானையும், பயங்கரவாதிகளையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பியிருக்கிறார்கள். அதே நேரத்தில், ‘பயங்கரவாதிகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை’ என்று துணை நிலை ஆளுநர் நிர்வாகத்துக்கு எதிராகவும் கோஷம் எழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் நடந்திருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அங்குள்ள அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. “காஷ்மீரில் சிறுபான்மை சமூகத்தினரைப் பாதுகாக்க யூனியன் பிரதேச நிர்வாகம் தவறிவிட்டது. பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால் இயல்புநிலை சீர்குலைந்திருக்கிறது” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்திருக்கிறது. இந்த நிலையில்தான், பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 1,800 பேரை கூடுதலாக அனுப்ப மத்திய அரசு முடிவுசெய்தது.
2019-ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அது இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய பா.ஜ.க அரசால் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு, அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. துணை நிலை ஆளுநரின் ஆட்சிதான் அங்கு நடைபெற்றுவருகிறது. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநராக இருக்கும் மனோஜ் சின்ஹா மீதும், மத்திய பா.ஜ.க அரசு மீதும் அங்குள்ள அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அங்கு, தேர்தல் நடத்தப்பட்டு, அரசியல் கட்சிகள் சுதந்திரமாகச் செயல்படுவதை உறுதிசெய்தால்தான், பயங்கரவாத நடவடிக்கைகள் குறையும் என்று கட்சித் தலைவர்கள் கூறிவருகிறார்கள்.