தண்ணீர் இல்லாததால் தெங்கம்புதூர் பகுதியில் வாடும் நெற்பயிர்: விவசாயிகள் கவலை

நாகர்கோவில்: தெங்கம்புதூர் பகுதியில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் வாடும் நிலை உருவாகி உள்ளது. மாவட்ட கலெக்டர் நேரடியாக தலையிட்டு தண்ணீர் சீராக விநியோகம் செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என்று இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது கும்பபூ சாகுபடி நடந்து முடிந்து நெற்கதிர்கள் வரும் நிலையில் பயிர்கள் உள்ளன. குறிப்பாக குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும சாகுபடி முடிந்து ஒரு மாதம் கடந்த பிறகுதான் தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதியில் சாகுபடி தொடங்கும்.

தற்போது அங்கு சாகுபடி செய்யப்பட்டு உள்ள நெற்பயிர்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே நெற்பயிர்கள் வாடும் நிலை உருவாகி உள்ளது. தண்ணீர் இல்லை என்றால், நெற்பயிர்கள் கருகுவதோடு, நெல் சாகுபடியும் அழிந்துவிடும் என்று விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இது குறித்து தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வயல்பரப்புகள் குளத்துபாசனம், ஆற்றுபாசனத்தை நம்பியே உள்ளது. ஆனால் தெங்கம்புதூர் பகுதியில் உள்ள வயல்கள் ஆற்றுபாசனத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. மொத்தம் சுமார் 700 ஏக்கர் நிலம் உள்ளது.

தற்போது 400 ஏக்கர் வயல் பரப்புகளில் நெல்சாகுபடி நடந்து வருகிறது. வயல்களில் சாகுபடி செய்து அறுவடை முடிவதற்குள் பல கஷ்டங்களை நாங்கள் சந்தித்து வருகிறோம். வயலில் நெற்சாகுபடி செய்த நாளில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திலும் தொடர்ந்து தொடர்பு கொண்டு தண்ணீர் பெறவேண்டிய நிலை இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெங்கம்புதூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிருக்கு தேவையான தண்ணீரை தந்தால், நாங்கள் தொடர்ந்து நெற்பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஆர்வமாக இருக்கும்.

வருடம் தோறும் நெல்சாகுபடி செய்யும் பரப்பளவு குறைந்து வருகிறது. இதனை பயன்படுத்தி விவசாயிகளிடம் இருந்து நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி பிளாட் போடும் நபர்கள் வீட்டுமனைகளாக மாற்றி வருகிறார்கள். இது வேதனையாக உள்ளது. தற்போது கும்பபூ சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிருக்கு போதிய தண்ணீர் இல்லாதால் நெற்பயிர்கள் அனைத்தும் வாடும் நிலை உள்ளது. மேலும் வயல்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் பாளம்பாளமாக பெயர்ந்துள்ளது. மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து தண்ணீர் சீராக விநியோகம் செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.