டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி – துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா இடையே மீண்டும் மோதல் வெடித்து உள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள 250 வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் 134 வார்டுகளில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக 104 வார்டுகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை இந்த முறை ஆம் ஆத்மி கட்சி தட்டி பறித்துள்ளது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 126 இடங்களுக்கு அதிகமாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதால், மேயர் பதவியை பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதை அடுத்து, டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக போட்டியிடாது என அக்கட்சி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே இந்த முடிவை பாஜக திரும்பப் பெற்றது.
இதற்கிடையே, டெல்லி மாநகராட்சியின் இடைக்கால சபாநாயகராக, முகேஷ் கோயலை நியமிக்கும்படி, துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு ஆம் ஆத்மி கட்சி பரிந்துரை செய்தது. இதை ஆளுநர் கண்டு கொள்ளவில்லை.
நாளை டெல்லி மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக கவுன்சிலர் சத்ய சர்மா என்பவரை இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்து, துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதாவது, தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள பாஜகவைச் சேர்ந்த ஒருவரை, துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா நியனம் செய்துள்ளார். ஆளுநரின் இந்த முடிவுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாவது:
டெல்லி அரசின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் தலையிட எந்த முயற்சியையும் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா விட்டுவிடவில்லை. டெல்லி மேயர் தேர்தலில் தலையிட துணை நிலை ஆளுநர் விரும்புகிறார். அதற்காக வேண்டுமென்றே உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.