விரைவில் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தயாரிப்பு வேலைகளில் நிதி அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தொழில் கூட்டமைப்புகள் சார்பாக பட்ஜெட் கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் முன்வைப்பது வழக்கம்.
அந்தவகையில் தமிழகத்தின் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பாக அதன் தலைவர் வ.நாகப்பன் சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துள்ளார். நிதியமைச்சரிடம் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன, சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றி அவரிடம் பேசினோம்.
வ.நாகப்பன் கூறுகையில், “தற்போது சர்வதேச பொருளாதார சூழலும், உள்நாட்டு பொருளாதார சூழலும் பல்வேறு நிலையற்றத்தன்மையில் இருந்து வருவதால் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டாக இருக்கிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் வட்டி விகிதம், வேலைவாய்ப்பின்மை, ரூபாய் வீழ்ச்சி போன்ற பல சவால்களையும் எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் என்னென்ன விஷயங்களிலெல்லாம் கவனம் செலுத்தலாம் என்பதை ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பாக நிதியமைச்சர் முன்வைத்தோம்.
வங்கி வாராக்கடன்களை வசூலிக்கும்போது கைப்பற்றப்படும் சொத்துகளை ஏலத்தில் விற்கிறது. ஆனால் அந்த சொத்துக்கான மூலதன ஆதாய வரி செலுத்தும் நோட்டீஸ் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவருக்குச் செல்கிறது. இதனால் வரி வருவாய் அரசுக்கு வருவது பாதிப்படைகிறது. சொத்துகளைப் பறிமுதல் செய்து காசாக்கும் வங்கிகளே வரியை ஏற்றுக்கொள்ளலாம் என்று அவரிடம் கூறினோம்.
எல்லோரும் எதிர்பார்க்கும் தனிநபர் வருமான வரி வரம்பு தொடர்பாகவும், ஜிஎஸ்டி தொடர்பாகவும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி தொடர்பாக இருக்கிற சிக்கல்களையும் கூறியிருக்கிறோம். இதுபோக வருமான வரி விவகாரங்களில், மேல்முறையீடு செய்வது, அபராதம் விதிப்பது போன்றவற்றிலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். கோரிக்கைகள், பரிந்துரைகள் அனைத்தையும் பரிசீலனை செய்வதாகவும், சம்பந்தப்பட்ட துறைகளோடு விவாதித்த பிறகே எந்த முடிவும் எடுக்க முடியும் என்றும் நிதியமைச்சர் கூறியதாக தெரிவித்தார்.