புதுக்கோட்டை: “நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தமிழகத்துக்கே அவமானம்” – துரை வைகோ

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, அந்த கிராமத்தை ம.தி.மு.கவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பார்வையிட்டார். ஒவ்வொரு வீடாகச் சென்றவர், இந்த செயலில் ஈடுபட்டதாக, யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என்ற பட்டியலின மக்களிடம் கேள்வியை எழுப்பினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது, மிகவும் இழிவான செயல், கண்டிக்கத்தக்கது. விஞ்ஞான உலகில் இதுபோன்ற இழிவான செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடமையான தண்டனை அளிக்க வேண்டும். மேலும், இது போன்ற செயல் தமிழகத்தில் வேறு எங்கும் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இழிவான செயல் நடைபெற்றது தமிழகத்திற்கு அவமானம். ஒவ்வொரு தமிழனுக்கும் இது அவமானம். ஆறறிவு படைத்த மனிதன் சக மனிதனுக்கு இது போன்ற இழிவான செயலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வளரும் தலைமுறைகளை முறையாக படிக்க வைத்து அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டிய இந்த காலகட்டத்தில், சாதிக் கலவரங்கள்,மதக் கலவரங்கள் தூண்டுவதைப் போல சில சமூகவிரோதிகள் இதுபோன்று ஈடுபடுவது வேதனை.

தமிழக அரசு, காவல்துறை இது தொடர்பான நடவடிக்கை எடுத்து வருகிறது, 24 மணி நேரமும் காவல்துறையும் ஆட்சியரும் பொதுமக்களைக் கண்காணித்து பாதுகாப்பு கொடுக்க முடியாது. அதனால் மக்கள் தான், குறிப்பாக, சாதி மத இன வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து விட்டு நாம் அனைவரும் மனிதர்கள் என்று மனிதநேயத்துடன் பழக வேண்டும்.

இது முழுமையாக ஒழிய, மக்கள் திருந்தி சாதி, மத வேறுபாட்டால் நம்மை பிரிக்க முடியாது என்று ஒருமித்த கருத்தோடு இருக்கும் போதுதான் இது சாத்தியமாகும். சாதிய அமைப்புகள் சாதி ரீதியாக செயல்பட கூடியவர்கள் இது போன்று செயல்பட்டால் நம்மை மக்கள் புறக்கணிப்பார்கள் என்ற எண்ணம் தோன்றும். அப்போதுதான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இறையூர் மட்டுமின்றி இது போன்ற செயல் எங்கு இருந்தாலும் ம.தி.மு.க குரல் கொடுக்கும். மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும். மனிதர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதை மதிமுகவின் நோக்கம். வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் இறையூர் நிகழ்வு தொடர்பாக ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கும் வரை நாங்களும் ஓயமாட்டோம் மக்களுடன் சேர்ந்து நிற்போம்.

அரசியல் இயக்கங்களில் உள்ளவர்களுக்கு ஒவ்வொருவர்களுக்கும் ஒரு கொள்கை ஒரு சித்தாந்தம் இருக்கலாம், அந்தக் கொள்கையின் படி அவர்கள் கொள்கைகளை சித்தாந்தத்தை மக்களிடம் சென்று அதை பரப்பி வருகின்றனர். அதே நேரத்தில் பத்திரிகையாளர்கள் அவர்களது கடமையைச் செய்கின்றனர். ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு நிலைபாடு உள்ளது. அதன்படி பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளிடம் கேள்விகளை முன்வைக்கின்றனர் அந்த கேள்வியை கேட்கும் போது அரசியல்வாதிகள் பதில் சொல்ல வேண்டியது அவர்களது கடமை. அதை விடுத்து பத்திரிகையாளர்களை அவமானப்படுத்துவது தவறான செயல்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை இது போன்று பேசுவது எதிர்கால அரசியலுக்கும் நல்லது இல்லை அவரது இயக்கத்திற்கும் இது நல்லது இல்லை” என்றார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.