பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பெண் பயணி ஒருவரின் மேல் சட்டையை கழற்ற சொல்லி வலியுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. கிருஷானிகாத்வி என்ற விமான பயணி தனது டிவிட்டர் பதிவில், ‘நான் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது, பயணிகளிடம் பரிசோதனை செய்ய நியமனம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள், தான் அணிந்திருந்த சட்டையை ஸ்கேனிங் செய்வதற்காக கழுட்டும் படி வலியுறுத்தினர். இது எனக்கு வெட்கம், வேதனை மற்றும் அவமதிப்பு ஏற்படுத்தியதாக பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. பலர் கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். இதனிடையில் கிருஷானிகாத்வியின் டிவிட்டர் பதிவு குற்றச்சாட்டை சிஎஸ்ஐஎப் அதிகாரிகள் மறுத்துள்ளனர். விமான நிலையத்திற்கு வந்த இளம்பெண் பேட்ஜ் மற்றும் மணிகள் பொருத்தியுள்ள டெனிம் ஜாக்கெட் அணிந்திருந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் சிஎஸ்ஐஎப் வீரர்கள், அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டை ஸ்கேன் செய்வதற்காக தனி அறைக்கு அனுப்பினர்.
ஸ்கேனிங் முடிந்த பின் சாதாரணமாக தான் அவர் வெளியில் வந்தார். யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. விமான நிலைய போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுக்கவில்லை. ஆனால் சிஎஸ்ஐஎப் போலீசாருக்கு எதிராக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவரின் குற்றச்சாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தேக பார்வையில் பார்க்க செய்துள்ளதாக அதிகாரிகள் அதிருப்தி வெளிப்படுத்தி’ உள்ளனர்.